புதுதில்லி : அக்னிபாத் திட்டம் எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு போராட்டங்கள் தூண்டப்பட்டாலும் இந்திய இளைஞர்களிடையே மத்திய அரசின் இந்த திட்டம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஆறரை லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் போர்கப்பல்களில் முதல்முறையாக பெண்கள் மாலுமிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான பணியை தொடங்குவதாக இந்திய கடற்படை ஜூலை 1 அன்று அறிவித்தது. மேலும் ஆன்லைன் விண்ணப்ப செயல்பாடுகளை ஜூலை 15 முதல் 30வரை திறக்கவுள்ளது. போர்க்கப்பல்களில் செயல்பாடுகளை பொறுத்து பெண்களை மாலுமிகளாக பணியமர்த்த முதல்முறையாக இந்திய கடற்படை அனுமதியளித்துள்ளது.
இருந்தபோதிலும் இந்த 2022ம் ஆண்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரவுள்ள 3000பேரில் அக்னிவீராங்கனைகளின் எண்ணிக்கை இதுவரை இறுதிசெய்யப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தோராயமாக 10000 பெண்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ளதாக உயரதிகாரிகள் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்திய பாதுகாப்பு படைகள் 1990இலிருந்து தங்களது வலிமையான ராணுவப்படையில் பெண்களை சேர்த்து வருகின்றன. ஆனால் பெண்கள் அதிகாரிகளாக மட்டுமே நியமிக்கப்படுவது 2019-20ல் மாற்றப்பட்டது. இந்திய பாதுகாப்புப்படைகள் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க தொடங்கியது. இதன்காரணமாக ராணுவ காவல்துறையின் சிஎம்பி கார்ப்ஸில் தற்போது 100 பெண்கள் ஜவான்களாக பணிபுரிகின்றனர்.
மேலும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது நீதிமன்ற விடுமுறைக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஆஜராகும் மனுதாரர் வழக்கறிஞர் எம்.எல் சர்மா கூறுகையில் "அரசு வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக ரத்து செய்யவேண்டும். ஆனால் அது சரியா தவறா என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்" என தெரிவித்துள்ளார்.