
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்தப்போரின் போதே, இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்த முயன்றது. அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்துத் தடுக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைகளை தகர்த்தெறிந்தது. மேலும் கராச்சி துறை முகத்தை நோக்கி ஐஎன்எஸ் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டது இதனை தொடர்ந்து மே 10 ஆம் தேதி, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் தனது இந்திய பிரதிநிதியைத் தொடர்புகொண்டு போர் நிறுத்தத்திற்கு கெஞ்சியதை டுத்து, இந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தொடங்கிய ஆப்ரேஷன் சிந்தூரில் ஹார்பி மற்றும் ஹரோப் ஆளில்லா ட்ரோன்களை மட்டுமின்றி, Warmate, SkyStriker, மற்றும் Nagastra ஆகிய வியூக ட்ரோன்களையும் பயன்படுத்தியது.
இந்த நிலையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.செய்தியாளர்களை சந்திருந்த அவர், "36 மணி நேர இடைவெளியில் 80 ட்ரோன்களை இந்தியா, எங்களை எல்லைக்குள் அனுப்பியது.நூர் கான், சர்கோதா, ரஃபிக்கி, ஜேக்கபாபத், முரிட்கே விமானப்படை தளம் உட்பட, மொத்தம் 11 இடங்களை இந்தியா குறி வைத்து தாக்குதல் நடத்தியது
இந்த தாக்குதல்கள் சிறிய அளவிலானதுதான்" என்று கூறியுள்ளார். நேற்று வரை எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று சொன்னவர்கள், இன்று தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இருப்பினம் தாக்குதல் சிறிய பாதிப்பை ஏற்படுத்தியதாக சொல்வதெல்லாம், கதை அடித்து விடுவதை போல இருக்கிறது என பல்வேறு தரப்பினரும் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
இதற்கிடையில் பாகிஸ்தானில் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, ''இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதும் ராணுவ செயலாளர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார்.இந்தியாவுடன் போர் தொடங்கிவிட்டது. பாதுகாப்பு காரணத்திற்காக பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். தியாகம் என்பது விதிக்கப்பட்டிருந்தால் அது இங்கேயே நடக்கட்டும். தலைவர்கள் பதுங்கு குழிக்குள் இறக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தேன்'' எனக் குறிப்பிட்டார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை போர் தொடங்கும் பல நாள்களுக்கு முன்பே கனித்ததாகவும் கூறினார்.
மேலும் இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் இதுகுறித்து கூறுகையில் பாகிஸ்தானின் சமா டிவி தகவலின்படி ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட 138 பேருக்கு வீர திருமகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை 400-500 வரை இருக்கலாம். இந்த தாக்குதலால் சிறிய பாதிப்புதான் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் பொய் சொல்கிறார் என தில்லான் கூறியுள்ளார்.
