24 special

5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவு...மோடியா - ராகுலா ?

Pmmodi,Rahulgandhi
Pmmodi,Rahulgandhi

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பொதுவாகவே மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்கள் எப்போதும் மிக முக்கியமாக பார்க்கப்பட்டாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் அரசியல் கட்சிகளின் நாடித்துடிப்பை எகிற செய்யும் விதமாகவே அமைகின்றன. 


அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் மத்தியில் ஆளும் பாஜக அரசும், ஆட்சியைப் பிடிக்க போராடும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை எதிர்கொண்டன. இந்த நிலையில், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.  

ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்த வரை 199 இடங்களில் பெரும்பான்மையை பிடிக்க 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், பல்வேறு கருத்து கணிப்புகளிலும் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெரும் என்றே தெரியவந்துள்ளது. சி.என்.என் நியூஸ் 18 குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 111 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 74 இடங்களிலும், மற்றவை 14 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 108 முதல் 128 வரையிலான இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 56 முதல் 72 இடங்களிலும், மற்றவை 13 முதல் 21 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 115 முதல் 130 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 65 முதல் 75 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்-கி-பாத் என்ற டிஜிட்டல் தளம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 100 முதல் 122 வரையிலான இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 62 முதல் 85 இடங்களிலும், மற்றவை 14 முதல் 15 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் மூலம் ஆளும் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் தனது ஆட்சியை தக்கவைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

அடுத்ததாக, மத்தியபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை அங்கு ஆட்சியை பிடிப்பதில் பாஜக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே, கடுமையான இழுபறி இருக்கும் என தெரியவந்துள்ளது. 230 தொகுதிகள் கொண்ட மத்தியபிரதேசத்தில் பெரும்பான்மை பெற 116 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில், சி.என்.என் நியூஸ் 18 குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 112 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 113 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 105 முதல் 117 வரையிலான இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 109 முதல் 125 இடங்களிலும், மற்றவை 1 முதல் 5 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 118 முதல் 130 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 97 முதல் 107 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்-கி-பாத் என்ற டிஜிட்டல் தளம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 100 முதல் 123 வரையிலான இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 102 முதல் 125 இடங்களிலும், மற்றவை 05 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த வரை 90 இடங்களில் பெரும்பான்மையை பிடிக்க 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், பல்வேறு கருத்து கணிப்புகளிலும் காங்கிரஸ் தனது ஆட்சியை தக்க வைக்கும் என்றே தெரியவந்துள்ளது. சி.என்.என் நியூஸ் 18 குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 47 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 32  முதல் 40 வரையிலான இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 48 முதல் 56  இடங்களிலும், மற்றவை 2 முதல் 4 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 34 முதல் 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 முதல் 52 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி-வோட்டர் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 36 முதல் 48 வரையிலான இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 41 முதல் 53 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கருத்து கணிப்பின் மூலம் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற பாஜகவின் கனவை தவிடு பொடியாக்கி, ஆளும் காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் தனது ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகி உள்ளது. 

அடுத்ததாக, வடகிழக்கு மாநிலமான மிசோரமை பொறுத்தவரை பாஜக காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில், ABP சி-வோட்டர்  நடத்திய கருத்துக் கணிப்பில், மிசோரம் தேசிய முன்னணி ( MNF ) கட்சி 15 முதல் 21 இடங்களிலும், ஜோரம் மக்கள் இயக்கம் ( ZPM ) 12 முதல் 18  இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 முதல் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் ஆளும் மிசோரம் தேசிய முன்னணி ( MNF )கட்சி 14 முதல் 18 இடங்களிலும், ஜோரம் மக்கள் இயக்கம் ( ZPM ) 10 முதல் 14 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 முதல் 13 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் மிசோரம் தேசிய முன்னணி கட்சி 17 முதல் 22 இடங்களிலும், ஜோரம் மக்கள் இயக்கம் 7 முதல் 12 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 7 முதல் 10 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்-கி-பாத் என்ற டிஜிட்டல் தளம் நடத்திய கருத்துக் கணிப்பில் மிசோரம் தேசிய முன்னணி கட்சி 10 முதல் 14 இடங்களிலும், ஜோரம் மக்கள் இயக்கம் 15 முதல் 25 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 9 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசோரமில் பாஜக 3-க்கும் குறைவான இடங்களை கைப்பற்றுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பின் மூலம் மிசோரமில் ஆளும் மிசோரம் தேசிய முன்னணி கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலும், தொங்கு சட்டசபை அமைவதற்கான சூழல் இருப்பது தெரியவந்துள்ளது. 

இறுதியாக, தெலங்கானா மாநிலத்தை பொறுத்த வரை மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 60 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சி ஆட்டம் கண்டு, காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் இருப்பது தெரியவந்துள்ளது. சி.என்.என் நியூஸ் 18 குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், பி.ஆர்.எஸ் கட்சி 44 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 60 முதல் 70 இடங்களிலும், சந்திர சேகர் ராவின் பி.ஆர்.எஸ் கட்சி 37 முதல் 45 வரையிலான இடங்களிலும், பாஜக 6 முதல் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும்  காங்கிரஸ் கட்சி 58 முதல் 68 இடங்களிலும், பி.ஆர்.எஸ் கட்சி 46 முதல் 56 இடங்களிலும், பாஜக 4 முதல் 9 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்-கி-பாத் என்ற டிஜிட்டல் தளம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 48 முதல் 64 இடங்களிலும், பி.ஆர்.எஸ் கட்சி 40 முதல் 55 இடங்களிலும், பாஜக 7 முதல் 13 இடங்களிலும், வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் மூலம் தெலங்கானாவில் ஏறத்தாழ காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. 

எதுவாகினும், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் எந்த கட்சி ஆட்சியமைக்க போகிறது, எந்த கட்சி ஆட்சி கவிழ போகிறது  என்பதை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி வரை அனைவரும் பொருந்திருந்துதான் ஆக வேண்டும்.