24 special

சென்னை சிட்டியில் மாடுகளை வைத்து கலக்கும் ஒரு தம்பதியினர்!! சாணத்தில் இருந்து இந்த தம்பதியினர் கண்டுபிடித்த ஒரு புதிய கண்டுபிடிப்பு!!

COW
COW

முந்தைய காலங்களில் வீட்டு வாசலில் இருந்து வீட்டின் தொழுவம் வரையிலும் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருள் மாட்டு சாணம்! ஏனென்றால் மாட்டு சாணத்திற்கு நோய் எதிர்க்கும் தன்மை உள்ளது இதனாலே பெரும்பாலான வீடுகளில் மாடு என்பது வளர்க்கப்பட்டு வந்தது. மேலும் அன்றைய காலங்களில் ஒருவர் 10 முதல் 15 மாடுகளை வைத்திருக்கிறார் என்றால் அவர்தான் அந்த பகுதியில் செல்வந்தர். மேலும் செல்வந்தர்களாக இருந்த பலரும் தன் வீட்டில் இரண்டு மாடுகளையாவது வைத்திருப்பார்கள். ஆனால் இந்த காலம் மாறி மாறி தற்போது கிராமங்களில் ஒரு சில வீடுகளில் மட்டுமே அதிக மாடுகளை பார்க்க முடிகிறது அதுவும் அவர்கள் பால் வியாபாரம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டில் அதிக மாடுகள் உள்ளது. மேலும் பால் தரும் பசு பாலிருக்கும் பால் சார்ந்த பொருட்களுக்குமே வளர்க்கப்படுகிறது. 


மேலும் பல பகுதிகளில் குறிப்பாக தமிழகத்தில் பசுவை தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிலர் எருது மற்றும் காளைகளையும் வளர்த்து தங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் சில மாடு வகைகள் இன்னும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மற்றும் சில மாடு வகைகள் அழிந்தே விட்டது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாட்டு வகையை தமிழ்நாட்டின் தலைநகரில் வளர்த்து பாதுகாத்து அந்த மாட்டின் மூலம் கிடைக்கும் சாணத்தை மட்டும் வைத்து 20க்கும் மேற்பட்ட பொருள்களை தயாரித்து தொழில் முனைவோர்களாக ஒரு தம்பதிகள் மிளிர்ந்து வருகின்றனர். அதாவது, சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ப்ரீத மணிகண்டன் தம்பதியினர் நன்கு படித்து ஐடி துறையில் நல்ல வருமானத்தை ஈட்டி வந்துள்ளனர். இருப்பினும் 2017ல் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு நாட்டு மாடு குறித்த விழிப்புணர்வு தங்களுக்கு ஏற்பட்டதாகவும் அதற்குப் பிறகு நாட்டு மாடு குறித்த தகவல்களை ஆராய்ந்து மாடுகளை குறித்து தெரிந்து கொண்டு ஒரே ஒரு மாட்டு கன்றை வாங்கி வளர்த்தோம் என்று கூறியுள்ளனர். 

மேலும் அவர்களிடம் தற்பொழுது 120க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளது. அவற்றை சென்னை நகரத்திற்கு உள்ளே பராமரித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் வளர்த்து வருகின்ற மாடுகளை பார்க்கும் பொழுது சாதாரணமாக நாம் இதுவரை பார்த்த மாடுகள் போன்று தென்படவில்லை அனைத்தும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற உயரத்தில் குறைந்த பசுக்கள். அப்படி சித்தூர் குட்டை மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த ஒரு குட்டை வகையைச் சேர்ந்த பசுக்களையும் இந்த தம்பதியினர் பராமரித்து வருகின்றனர். மேலும் இக்காலத்தில் உள்ள குழந்தைகளுக்கும் பூனை, நாய் போன்றவற்றைத் தவிர பசுக்களையும் மாடுகளையும் வளர்க்க முடியும் என்பதை எடுத்துக் கூறவும் முயற்சி செய்கிறோம். பல பள்ளி குழந்தைகளும் இங்கு வந்து செல்வார்கள் என்று கூறுகின்றனர். 

மேலும் இவர்கள் பராமரிக்கும் பசுக்கள் அனைத்துமே பாலை பெருமளவில் உற்பத்தி செய்யாது அதனால் இந்த மாடுகள் மூலம் கிடைக்கும் சாணத்தை பயன்படுத்தி விபூதி, ஆரோக்கியமான குளியல் சோப், குளியல் பவுடர், சாம்பிராணி, கிருமி நாசினி பவுடர் என இருபதிற்கும் மேற்பட்ட பொருள்களை சாணத்தின் மூலமே தயாரித்து முன்னணி தொழில் முனைவோர்களாக இவர்கள் வளர்ந்துள்ளனர். அதிலும் தற்போது இவர்கள் முயற்சி செய்துள்ள ஒரு  பொருளைக் குறித்து கூறினால் நீங்களே ஆச்சரியம் அடைவீர்கள். அந்த பொருள்தான் சாணத்தின் மூலம் வீட்டிற்கு வர்ணம் பூசுவது. ஏனென்றால் முன்பு சாணத்தின் மூலம் வீட்டு முழுவதையும் தரையையும் மொலிகி இருப்பதை பார்க்க முடியும். இதனால் அந்த வீடு மொத்தமும் ஒரு கிருமி நாசினியாக இருந்திருக்கிறது.

ஆனால் இன்று கட்டப்படுகின்ற வீடுகளை பார்க்கும் பொழுது கெமிக்கல் கலந்த பெயிண்டுகள் வெயிலின் தாக்கம் வீட்டிற்குள் வரக்கூடாது என அதற்கும் கெமிக்கல் கலந்த பெயிண்டுகள் என அனைத்தும் கெமிக்கல் தான்!! ஆனால் இவர்கள் சாணத்தின் மூலம் வீட்டிற்கு உள் அடிக்கும் பெயிண்டை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பழைய காலங்களில் எப்படி சாணம் ஒரு கிருமி நாசினியாக வீட்டிற்க்குள்ளே இருந்ததோ அதேபோன்று பெயிண்டின் மூலமும் இருக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் இந்த பெயிண்ட்டால் சாணத்தின் வாசம் தெரியவே தெரியாது என்றும் கூறுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் வளர்க்கும் பசுக்கள் அனைத்துமே இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களையே உண்டு வருகிறது. இதனால் சாணத்திலும் எந்த வித துர்நாற்றமும் வீசுவதில்லை!! இதைத் தவிர மொட்டை மாடியில் சாணத்தின் மூலம் வெயிலின் தாக்கம் இறங்காதபடி அடிக்கும் ஒரு பெயிண்டை தயாரிக்கும் முயற்சியிலும் அவர்கள் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் வருமானம் தற்போது கொட்ட துவங்கியுள்ளதாகவும் வேறு தெரிவித்துள்ளனர்...