குஜராத் தேர்தலில் பாஜக வெற்றியை மட்டம் தட்டும் விதமாக செய்தி வெளியிட்ட திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகைக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜகவை சேர்ந்த அதன் மாநில செயலாளர் SG.சூர்யா குறிப்பாக ஆதாரத்துடன் அவர் கொடுத்த விளக்கம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து சூர்யா பாஜகவின் ஒரே நாடு பத்திரிகைக்கு தெரிவித்த கருத்து பின்வருமாறு :குஜராத் சட்டமன்றத்துக்கான 182 தொகுதிகளில் 156 தொகுதிகளைப் வென்று மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க. அங்கு, தொடர்ச்சியாக 7-வது முறையாக பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியை இதற்கு முன்பு எந்தவொரு கட்சியும் அங்கு பெற்றதில்லை. அப்படி இருக்கையில், பா.ஜ.க-வின் குஜராத் வெற்றி பயப்படும் அளவிற்கு இல்லை என தி.மு.க அதிகாரப்பூர்வ நாளிதழான “முரசொலி” தலையங்கம் வெளியிட்டுள்ளது.
குஜராத் மக்கள் பா.ஜ.க-விற்கு அளித்துள்ள வாக்குகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, அதனை மற்ற கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளுடன் ஒப்பிட்டு அடிப்படை புரிதல் இல்லாத கணக்கீடுகளை காட்டியுள்ளனர்.
1967-ல் ஆரம்பித்து இப்போது வரை கூட்டணி கட்சிகள் தயவில்லாமல் தி.மு.க தமிழகத்தில் ஒரு முறை கூட ஆட்சி அமைத்ததில்லை. முந்தைய காலங்களில் தி.மு.க எப்படியெல்லாம் ஆட்சியை பிடித்தது? இவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் பா.ஜ.க-வின் வெற்றியை விமர்சிக்கின்றனர் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தி.மு.க முதன் முதலில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது ஒரு அதிர்ஷ்டத்தில் என்று சொல்ல வேண்டும். 1962 சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறை முதலமைச்சராக வெற்றி பெற்றார் காமராஜர். அப்போது இந்தியா முழுவதும் காங்கிரஸ் வலுவிழக்கத் தொடங்கியது. இதனால் (1954-1963) முதல் ஒன்பது வருடங்களாக முதல்வராக இருந்த காமராஜர் தான் வகித்திருந்த முதலமைச்சர் பதவியில் இருந்து தாமகவே விலகி அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டு டெல்லி சென்று விட்டார். காங்கிரஸின் வலுவான தலைவர் பொறுப்பில் இருந்து விலகியது தி.மு.க-விற்கு சாதகமானது.
அந்த நேரம் பார்த்து தமிழகத்தில் கடுமையான பஞ்சம். 1967 தேர்தல் பிரச்சரத்தில் “காமராஜர் அண்ணாச்சி,கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” போன்ற முழக்கங்களை தி.மு.க-வினர் பயன்படுத்தினர். வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் தி.மு.க-வின் வேட்பாளரும் முன்னணி நடிகருமான எம்.ஜி.ஆர், நடிகர் எம். ஆர். ராதாவால் சுடப்பட்டார். இச்சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் தி.மு.க-வுக்கு ஆதரவான அனுதாப அலையையும் ஏற்படுத்தியது. திமுக 8 கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் பெரியார் தி.மு.க-வை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1967-ஆம் ஆண்டு முதன்முறையாக தி.மு.க தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை 1969-ல் இறந்தார். அவருக்குப் பின் நெசெஞ்செழியனை வீழ்த்தி மு.கருணாநிதி தி.மு.க-வின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். மத்தியில் இந்திய தேசிய காங்கிரஸ் 1969-ஆம் ஆண்டு பிளவு பட்டது. இதனால் 1971-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியில் இருந்து விலகியது. காமராஜர் போட்டியிடவில்லை. 5 கட்சிகளுடன் கூட்டணி வைத்து தி.மு.க வெற்றி பெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாமல் விலகியதால் தான், தி.மு.க 184 இடங்களை கைப்பற்றி, அதிக இடங்கள் வென்றது. இந்த தேர்தலுக்கு பிறகு தி.மு.க ஒருமுறை கூட தொடர்ந்து இரண்டு தடவை ஆட்சி அமைத்த வரலாறே கிடையாது. அ.தி.மு.க – தி.மு.க என மாறி மாறி ஆட்சியமைத்து வந்தன. எல்லா தேர்தலிலும் தி.மு.க கூட்டணி வைத்தே வெற்றி கண்டது. தனித்து போட்டியிட முயற்சித்ததே இல்லை அதற்கான திராணியும் இல்லை என்பதே நிதர்சனம்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்து விட்டதால், தி.மு.க – அ.தி.மு.க பெரிய தலைவர்களின் தலைமை இன்றி முதன்முறையாக போட்டியிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இந்த வெற்றியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கான சாதனை கிடையாது. இதில் தி.மு.க பெற்ற மொத்த வாக்குகள் 1,74,30,179. அ.தி.மு.க பெற்ற வாக்குகள் 1,53,91,055. வெறும் 20,39,124 வாக்குகள் வித்தியாசமே உள்ளது. இதில் அ.தி.மு.க அதிருப்தியாளர்களால் உருவான அ.ம.மு.க கட்சியின் வாக்குகள் 10,85,985 சேர்த்தால், திமுக-அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் சொற்ப அளவிலேயே உள்ளது. இதனை மாபெரும் வெற்றி போல தி.மு.க-வினர் உருவகப்படுத்திக் கொண்டனர்.
இப்படியான வரலாற்றை கொண்ட தி.மு.க, பா.ஜ.க-வின் குஜராத் வெற்றியை விமர்சித்து முரசொலியில் கட்டுரை வெளியிட்டுள்ளது. குஜராத் தேர்தலில் பா.ஜ.க “தனித்து” போட்டியிட்டு 1 கோடியே 67 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. மற்ற அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை சேர்த்தாலும் பா.ஜ.க பெற்ற வாக்குகளை நெருங்க முடியவில்லை. மொத்தம் பதிவான வாக்குகளில் 53% வாக்குகளை பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க.
குஜராத்தில் பா.ஜ.க வாங்கிய வாக்குகள்: 1,67,07,957. குஜராத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக நின்றவர்கள் மொத்தம் வாங்கிய வாக்குகள் 1,47,71,177. ஆனால் 3,23,81,808 என வெட்கமின்றி பச்சை பொய்யை கூறுகிறது .
தன் மாநிலத்தில் பல கட்சிகள் கூட்டணி வைத்தும் கடந்த 52 ஆண்டுகளில் தொடர்ந்து இரு முறைக்கூட ஆட்சியமைக்க வழியில்லாத தி.மு.க, தொடர்ந்து 7-வது முறையாக எந்த கூட்டணியும் இல்லாமல் தன்னிச்சையாக சொந்த பலத்துடன் ஒரு மாநிலத்தை வென்றுள்ளதை பார்த்து “இது ஒன்றும் பெரிய வெற்றி இல்லை” என சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது என குறிப்பிட்டு முறையான பதிலடியை கொடுத்துள்ளார் sg சூர்யா.