குழந்தை மற்றும் பெண்களை கடத்துவது என்பது இப்போது உள்ள சமூகத்தில் மிகவும் சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் கூட குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று நாடு முழுவதும் எங்கும் உலாவி கொண்டு உள்ளது என்று பல செய்திகள் பரவி வந்தது. இவர்கள் என்ன காரணத்திற்காக கடத்துகிறார்கள் என்று புரியாமல் காவல்துறையினரும் பொது மக்களும் குழம்பிப் போய் இருக்கின்றனர். மேலும் சிலர் குழந்தை பெண்களை கடத்தி விட்டு அவர்களை விற்பது, அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்துவிட்டு சடலங்களை அப்படியே போட்டுப் போவது என்று ஆரம்பித்து கற்பழிப்பு வரை இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. இதிலும் ஒரு படி மேலே சென்று சில சைக்கோக்கள் இந்த மாதிரி கடத்தலில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் வருகிறது.
மேலும் அந்த சைக்கோக்கள் இவர்களை கடத்தி சித்திரவதை செய்து, அடையாளம் தெரியாத அளவிற்கு அவர்களின் உடல்களை சிதைத்து அதனைப் பார்த்து சந்தோஷப்படும் சைக்கோ கடத்தல்களும் நடந்து கொண்டு தான் உள்ளது. இதை பார்க்கும் போது மக்களின் மனதில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுகிறது. சாதாரண மக்கள் போல் கூட்டம் உள்ள இடங்களில் இவர்களும் ஐக்கியம் ஆகிவிட்டு, இந்தக் கூட்டத்தில் ஒருவரை குறிவைத்து கடத்தி அவர்களின் வீட்டார்களிடம் பணத்தையோ அல்லது வேறு ஏதும் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதனையும் மிரட்டி வாங்குகின்றனர். மேலும் அந்த வீட்டார்கள் எப்படியாவது என் குழந்தை வீட்டுக்கு வந்தால் போதும் என்ற மனநிலையில் அவர்கள் கேட்கும் பணத்தினை கொடுத்து பிள்ளைகளை மீட்டு வருகின்றனர். ஆனால் இப்போது இது போன்று இல்லாமல் ஒரு புதிய கடத்தல் முறை நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு பெண் தன்னைத் தானே கடத்தி வைத்துக் கொண்டு அவரின் பெற்றோர்களிடம் பணம் கேட்டுள்ளார். கேட்கும்போதே மிகவும் விசித்திரமாக இருக்கிறது அல்லவா??
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் அரசியல்வாதி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ஒருவர் அந்த படத்தில் என்னை கடத்தி வைத்துக்கொண்டு எனது தந்தையிடம் பணம் கேளுங்கள்!! அவரிடம் பணம் நிறைய இருக்கு, உங்களுக்கும் எனக்கும் தேவையான பணத்தினை அவரிடம் என்னை கடத்தி வைத்துள்ளதாக கூறி கேட்டால் அவர் கொடுத்துவிடுவார். அதை இருவரும் பங்கு பிரித்துக் கொள்ளலாம் என்று விஜய் சேதுபதியின் கடத்தல் கும்பல் இடம் கூறியிருப்பார். அந்தப் படத்தில் இந்த காட்சி நல்ல வரவேற்பையும் நகைச்சுவையும் பெற்று இருந்தது. இதே போலவே தற்போது ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது!!!மத்தியப் பிரதேச மாநிலம், ஷிவ்புரியைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தனது 21 வயதுள்ள மகள் ராஜஸ்தான் கோட்டாவில் தங்கி படிப்பதாகவும் தற்போது அவளது கை கால் கட்டப்பட்ட புகைப்படம் ஒன்று செல்போனுக்கு வந்ததாகவும், மேலும் அந்த கடத்தல் கும்பல் 30 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்தப் பெண் அந்த கல்லூரியில் படிக்கவில்லை என்றும், அவர் கடத்தப்படவில்லை என்றும் உறுதி செய்தது. பிறகு புகைப்படம் வந்த போன் நம்பரை வைத்து ட்ராக் செய்யும் போது அந்தப் பெண்ணின் தோழி " அவளுக்கு கோட்டாவில் படிப்பதற்கு விருப்பம் இல்லாமல், வெளிநாடு சென்று படிக்க திட்டமிட்டாள், அதற்காகத்தான் இப்படி கடத்தப்பட்டதாக அவள் தந்தையிடம் சொல்லி 30 லட்சம் வாங்கி நானும் அவளும் வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தோம் " என்று கூறியுள்ளார்! உலகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடக்கும் நேரத்தில் இப்படி பெற்றோர்களின் பயத்தையும் பாசத்தையும் பயன்படுத்தி பிள்ளைகளே இதுபோன்ற செய்து அவர்களின் இலக்குகளை அடைவதற்கு பல தவறான விஷயங்களில் ஈடுபடுகின்றனர்!! தற்போது இது குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!