திமுக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை அதிகாரிகள் மற்றும் முக்கிய ஆலோசகர்கள் அனைவரும் முதல்வரின் மருமகன் சபரீசனின் தேர்வில் தான் இருந்து வந்தனர் என்ற தகவல்கள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டுவந்தது. அந்த சூழ்நிலையில்தான் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருந்த ஆடியோ இரண்டு பாகங்களாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் முதல்வரின் மகன் உதயநதி மற்றும் மருமகன் சபரீசன் இருவரும் முப்பதாயிரம் கோடி அளவிற்கு வருமானத்தை குவித்து வைத்துள்ளதாக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது அறிவாலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ வெளியானதற்கு பிறகு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விளக்கங்களையும் அது தன்னுடைய ஆடியோ அல்ல என்று கூறியும் முதல்வரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தாலும் அமைச்சரவையும் மாற்றப்பட்டு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் பதவியும் மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாகவே முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டனர் மற்றும் காவலர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதற்கு பிறகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார் அவரது பதவி காலம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் நேற்று புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். ஷிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றதற்கு பிறகு உடனடியாக சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் உத்தரவின் படி தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷிவ்தாஸ் மீனா முன்பு பொறுப்பு வகித்த நகராட்சி நிர்வாக துறை செயலாளர் பணியை உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த கார்த்திகேயனை மாற்றியுள்ளனர். மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தக்கார், உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக், மீன்வளத் துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.
அதோடு மகளின் உரிமை தொகை திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் அர்ச்சனா பட்நாயக்கிற்கு இரண்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டுறவு சங்க பதிவாளராக உள்ள சுப்பையனுக்கு கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு அதிகாரி என்று கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. விஷி மகாஜன் என்பவருக்கு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் இணை மேலாளர் இயக்குர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுண்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக அண்ணாதுரை தமிழ்நாடு சாலை துறை திட்ட இயக்குனராக பிரபாகரையும் மற்றும் சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதி பிரிவு துறை ஆணையராக ஆனந்த் மோகனையும் நியமித்துள்ளது தமிழக அரசு. கிட்டத்தட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் பின்னணியை விசாரித்த பொழுது அரசியல் தலையிட்டில் சபரீசன் அதிகமாக இருந்து வந்தது விமர்சனத்திற்கு உள்ளாவது மற்றும் அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு பிடிக்காத காரணத்தினாலும் தற்போது தனக்கு விருப்பமான அதிகாரிகளை உதயநிதி நியமித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் மாற்றம் முடிவில் சபரிசனின் தலையீடு இல்லை எனவும் இந்த அதிகாரிகள் நியமனம் அனைத்தும் உதயநிதியின் சிபாரிசு எனவும் கூறப்படுகிறது. தற்பொழுது உதயநிதி, அரசு நிர்வாக அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் மேலும் முதல்வர் சபரீசன் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.