24 special

அமர் பிரசாத் ரெட்டி மீது தொடரும் வழக்குகள்!....கண்டனம் தெரிவித்த சீமானின் வலது கரம்!

amarprasad, seeman
amarprasad, seeman

கொடிகம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி இதுவரை 3  வழக்குகளில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக  போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அதனை காவல்துறை அகற்ற ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அந்தணர். அப்போது காவல்துறைக்கும், பாஜகவினருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஜேசிபி இயந்திரம் தாக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி முதலில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதற்கிடையில்,  அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீஸார் கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது புகார் எழுந்திருந்தது. அந்தப் புகாரின் பேரில் தற்போது சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது அவர் மீது 3 வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில் மேலும் தென்காசி வழக்கு ஒன்றில் 4வது வழக்கு கீழ் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்த வழக்குகள் பாய்வதால் அமர் பிரசாத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவும் சாத்தியம் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஆதரவாகவும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதமாகவும் நாம் தமிழர் கட்சி மூத்த நிர்வாகி சாட்டை முருகன் கடும் கண்டனத்தை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தது: "அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ! ஒரு வழக்கில் கைது செய்துவிட்டு தொடர் வழக்குகளை வைத்து குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்த முயல்வது வன்மையாக கண்டிக்கதக்கது. திமுகவை எதிர்த்து அரசியல் பேசினால் குண்டர் சட்டத்தில் அடைப்பீர்கள் என்றால் உங்கள் ஆட்சி முடிந்த பிறகு இது உங்களுக்கே திரும்ப நடக்கும். அமர் பிரசாத் ரெட்டியின் கோட்பாட்டில் முரண் இருந்தாலும் அவருக்கு தொடர் வழக்குகள் வைப்பது கண்டிக்க வேண்டியது. கருத்து சுதந்திரம் பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை". இவ்வாறு சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், திமுக அரசு காவல்துறையை ஏவிவிட்டு அமர் பிரசாத் மீது பொய் வழக்குகளை வேண்டுமென்றே போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதேசமயம் அண்ணாமலையின் வலது கரம்போல வலம் வரும் அமர் பிரசாத் ரெட்டியை, விரைவாகப் பிணையில் எடுத்துவிட வேண்டுமென்று பாஜக வழக்கறிஞர் பிரிவும் தீவிரம் காட்டிவருகிறது.