24 special

ஆந்திராவில் வன்முறை..! தீவைத்து கொளுத்தப்பட்ட அமைச்சரின் வீடு..!

jagan mohan reddy
jagan mohan reddy

ஹைதராபாத் : ஆந்திராவின் மிக முக்கியமான மாவட்டமாக கருதப்படும் கோணசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் அம்பேத்கார் மாவட்டம் என பெயர்மாற்றம் செய்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பொதுமக்கள் கொந்தளிப்பில் வன்முறை வெடித்தது. மாநில போக்குவரத்துத்துறை அமைச்சரின் வீடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


ஆந்திராவில் செயல்படும் கோணசீமா சாதனா சமிதி எனும் அமைப்பு  மாவட்டத்தின் பெயரை அம்பேத்கார் என மாற்றியதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் பொதுமக்களுக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. மாவட்ட தலைநகரான அமலாபுரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வர அழைப்பு விடப்பட்ட நிலையில் பொதுக்கள் ஆயிரக்கணக்கில் அமலாபுரத்தில் ஒன்றுகூடினர்.

அக்கூட்டத்தில் மாநில அரசுக்கெதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் எங்களுக்கு கோணசீமாவே வேண்டும். பழைய பெயரை திருப்பித்தா என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.வி.சுப்பாரெட்டி கூடுதல் காவலர் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர்மீதும் மக்கள் கல்வீசி தாக்கினர். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்ததுடன் அதே கோபத்தோடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சரின் இல்லத்துக்கு சென்றனர்.

போராட்டக்குழுவின் ஒருபாதியினர் காமநகரு பகுதியில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் பினிபே விஸ்வரூப்பின் இல்லத்தை சேதப்படுத்த ஆரம்பித்தனர். மேலும் அவரது வீடு ஜன்னலை உடைத்து  அங்கிருந்த பொருட்களை சூறையாடியதுடன் அமைச்சர் சென்ற கான்வாயையும் தாக்கினர். மேலும் இந்த தாக்குதலை முன்கூட்டியே அறிந்த போலீசார் அமைச்சரின் குடும்பத்தை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றினர்.

அதேபகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் அமைந்துள்ள முமுடிவரசட்டமன்ற உறுப்பினரான சதீஷின் வீட்டை சூறையாடிய மக்கள் வீட்டை தீயிட்டு கொளுத்தினர். இதைத்தொடர்ந்து காக்கிநாடா மற்றும் கோணசீமா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் காவல்துறையினர் முழுகண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.