துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோர் நேரில் சந்தித்து கொண்டனர், இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர்.
சென்னை வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேசின் தாயார் புஷ்பா நேற்று காலமானார். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று மாலை முக்கிய நிர்வாகிகள் உடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, தி.மு.க., இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி அங்கு வந்தார்.அஞ்சலி செலுத்திய பின், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை விரிவாக கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின் போது ஐசரி கணேஷ், தமிழக பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். அரசியலில் எதிர் எதிர் துருவமான இருவரும் ஒன்றாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசியல் குறித்த செய்திகள் மற்றும் வீடியோக்களை பெற 9962862140 என்ற எண்ணிற்கு NEWS என வாட்சாப் செயலில் அனுப்பவும் உடனே செய்திகள் உங்களை வந்து அடையும்.