24 special

காயத்ரி ரகுராமிற்கு கால் செய்த அண்ணாமலை; நடவடிக்கைக்கு காரணம் இதுவா?

Gayathiri rahuram,  annamalai
Gayathiri rahuram, annamalai

பாஜகவில் பெண் நிர்வாகிகளுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள் அதிகம் இருப்பதாக பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை பொறுமை காத்து வந்த அண்ணாமலை பொங்கி எழுந்து அதிரடி நடவடிக்கைகளை கட்டவிழ்ந்துள்ளார். ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கிய பாஜகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், புதிதாக கட்சியில் இணைந்த திருச்சி சூர்யா பாஜக பெண் நிர்வாகியை காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு ஆபாசமாக பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.


இந்த ஆடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக பரவியதை அடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி சூர்யா பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்ததோடு, இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷனையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் சம்மனே இல்லாமல் ஆஜரான காயத்ரி ரகுராம் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளார். 

பாஜகவினர் யூ-டியூப்பிற்கு அளிக்கும் பேட்டிகள் சர்ச்சையைக் கிளப்பி வருவதால் அதிரடி முடிவெடுத்த அண்ணாமலை, கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்கக்கூடாது என்றும் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

இந்நிலையில் பதவி பறிபோன நிமிடத்தில் இருந்தே பல்வேறு செய்தி மற்றும் யூ-டியூப் சேனல்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்து வரும் காயத்ரி ரகுராம் தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒரு தவறும் செய்யாத எனக்கு எதற்கு தண்டனை என்றும் விமர்சித்து வருகிறார். 

ஆனால் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கப்பட இதுமட்டும் காரணமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆம், பாஜகவில் தன்னை சீனியர் என சொல்லிக்கொள்ளும் காயத்ரி ரகுராம், அண்ணாமலையை விமர்சிக்கும் விதமாக பல கருத்துக்களை மறைமுகமாக முன்வைத்து வருகிறார். தமிழக பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை, புதிதாக வந்தவர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்து பதிவிட்டு வந்தார். இதற்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமின் கருத்துக்கு எதிர்கருத்து கூறி வந்தனர். 

இந்த சமயத்தில் தான் திருச்சி சூர்யா வீடியோ வெளியாகி இருந்தது. அதுகுறித்து ட்விட்டரில் பல ட்வீட்களை பகிர்ந்த காயத்ரி ரகுராம். ‘என் ரத்தம் கொதிக்குது’, ‘களப்பணி இல்லாமல் ஜால்ரா அடிச்சி வந்தால் இதுதான் நடக்கும்’, ‘செல்வா அண்ட் கோ என்னை ட்ரால் பண்ணாலும் ஆச்சர்யப்பட மாட்டேன்’, ‘சைக்கோ மொழி’ அப்படியெல்லாம் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு பதிவிட்டிருந்தார். 

காயத்ரி ரகுராமின் பல்வேறு கருத்துக்களை பொறுத்துக்கொண்ட அண்ணாமலை இந்த விஷயத்தில் தான் டென்ஷன் ஆகியுள்ளார். ஏற்கனவே கட்சிக்கு வெளியே இருப்பவர்கள் ஆடியோவை வைரலாக்கி வருவது போதாது என்றும், காயத்ரி தனது பங்கிற்கு எரியும் கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றியது அண்ணாமலையை கோவப்படுத்தியுள்ளது. அதனால் அவர் மீது உடனடி நடவடிக்கையை கட்டவிழ்த்துள்ளார். 

அதுமட்டுமின்றி தன்னை சஸ்பெண்ட் செய்த பிறகு அண்ணாமலை தனக்கு கால் செய்ததாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். அப்படி போன் செய்த அண்ணாமலை ஏன் என்னிடம் புகார் எதுவும் தரவில்லை என்று கேட்டதாகவும், சோசியல் மீடியாவில் நேரடியாக பதிவிடுவது கட்சிக்கு களங்கத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும் இல்லையா? என கேள்வி எழுப்பியதாகவும் கூறியுள்ளார். நீங்க சொல்லி நடவடிக்கை எடுக்காமல் இருப்பனா... என அண்ணாமலை கூறினார் எனத் தெரிவித்துள்ளார். இதனால் தான் தன்னை சஸ்பெண்ட் செய்ததாக காயத்ரி ரகுராமே ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.

 - அன்னக்கிளி