மதுரையில் திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘ஜீல் ஜீவன்’, விவசாயிகளுக்கான பயிர் காபீட்டுத் திட்டமான ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’, பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டமான ‘பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதற்காக மாநில அரசுகளுக்கு கோடிக்கணக்கில் நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வைத்து திமுக ஏதோ தானே அந்த திட்டத்தைக் கொண்டு வந்தது போல் பிரச்சாரம் செய்து வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு சொந்தம் கொண்டாடுவதாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாஜக நேரடியாக விமர்சித்த போதும் திமுக திருந்தியதாக தெரியவில்லை. மத்திய அரசு சம்பந்தமான திட்டங்களில் பாரத பிரதமர் மோடியின் படத்தையும், பெயரையும் மறைத்துவிட்டு முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள் படங்களை அச்சடித்த பேனர்கள் மற்றும் நோட்டீஸ்களை ஊர் முழுவதும் ஒட்டி வருகிறது.
வரும் 27ம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வர உள்ளது. அன்றைய தினம் நலத்திட்ட உதவிகளை வழங்குவதல், ரத்த தானம், அன்ன தானம், புதிய திட்டங்களை தொடங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தபால் அலுவலகத்தில் ‘பெண் குழந்தைகளுக்கு முதல் மாத சேமிப்பு கணக்கு தொடங்கும் விழா’ நடைபெற உள்ளது.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் இல்லந்தோறும் இருக்கும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா’ என்ற திட்டமாகும். ஆனால் இத்திட்டத்தை பெண் குழந்தைகளுக்கு திமுக சார்பில் தொடங்கி வைப்பது போல் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து TNNews24 சார்பில், பாஜகவின் தமிழக மாநில பொதுச்செயலாளரான சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்ட போது, “மத்திய அரசின் நலத்திட்டங்களை திமுக அரசு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காக திமுக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்” கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. அதில்“பாரத பிரதமர் மோடியால் ஏழை மக்கள் பயன் பெற கொண்டு வரப்பட்ட செல்வ மகள் சேமிப்புத்திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் திமுகவிக்கு நன்றி! நன்றி!! நன்றி!!” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், மக்கள் நலனுக்கு மத்திய அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை திமுக எப்போது விடும் என தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.
- அன்னக்கிளி