24 special

அண்ணாமலை அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு... அஞ்சப்போவது இல்லை என திட்டவட்டம்..!

Annamalai
Annamalai

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார் கைது செய்யப்பட்டுள்ள பாஜக தொண்டர்களை ஜாமினில் கொண்டுவர உடனடியாக மாவட்ட அளவில் வழக்கறிஞர் அணி உருவாக்க வேண்டும் என்றும் நம் தொண்டர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல அவர்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அண்ணாமலை தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், துச்சமாக நம்மை எண்ணித் தூறு செய்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லைஅச்சமென்பதில்லையே"அன்பார்ந்த தாமரைச் சொந்தங்களே!

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழரின் மாண்பையும், மரபையும், தொன்மையையும், இறை நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திமுக கடைபிடிக்கும் திராவிட மாடலே சிறந்தது என்று அவர்கள் நம்புவதால், பாரம்பரியமிக்க தமிழர் இனத்தையும், தமிழரின் இன மானத்தையும் தமிழர் மரபையும் தொடர்ந்து கேவலப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, இந்துக்களின் பிறப்பை இழிவுபடுத்திப் பேசியது எல்லாம் காவல்துறை கண்டு கொள்ளவில்லை. மனம் புண்பட்டு, அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் மக்களையெல்லாம் காவல்துறை தமிழகம் முழுவதும் கைது செய்கிறது.

ஒரு இனத்தையே இழிவுபடுத்திக் கேவலப்படுத்தும் ஆளும் கட்சி நபர்களையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கடந்த இரண்டு நாட்களாகக் கைது செய்கிறார்கள்.

தூத்துக்குடி நாகர்கோயில், வேலூர், ஈரோடு, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், நீலகிரி என்று தொடங்கிய கைது நடவடிக்கை, பரவலாகத் தமிழகம் முழுவதும் தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள்.

திமுகவின் அராஜகமும் ஆளும் கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும், கண்டிக்கத் தக்கது. மிக விரைவில் இந்தக் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. திமுக பேசினால், கண்களை மூடிக்கொண்டு, அந்த அவலத்தைக் கண்டுகொள்ளாத காவல்துறை..

மறுப்பு தெரிவிக்கும் மக்களையெல்லாம் கைது செய்வது காவல் துறையின் ஓர வஞ்சனையான நடவடிக்கையையே எடுத்துக்காட்டுகிறது. திமுகவின் கைது நடவடிக்கையைக் கண்டு எந்த பாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை. சிறையைக் கண்டு அச்சப்பட்டுப் பின்வாங்கும் அலறித் துடிக்கும் சின்னச் செயல் எல்லாம் பாஜகவினர் செய்யமாட்டார்கள். தவறை யார் செய்தாலும், பாஜக தட்டிக் கேட்கத் தயங்காது.

நம் மாவட்டத் தலைவர்களும், செயலாளர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் பெருங்கோட்டப் பொறுப்பாளர்களும், கைது செய்யப்பட்டுள்ள நம் தொண்டர்களுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில் அவர்களது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்குங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

நம்முடைய தொண்டர்கள் எல்லாம் பெரிய பணக்காரர்கள் இல்லை. அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத அளவிற்கு அவர்களது குடும்பத்திற்கு நம்பிக்கை ஊட்டுங்கள்.பிறகு அவர்களுக்குச் சட்டரீதியான பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்கறிஞர்கள் குழுவை அமையுங்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் ஜாமீனில் வெளியே எடுங்கள்.

போராட்டம் என்பது நம் எதிர்ப்பைத் தெரிவிக்க, ஜனநாயக ரீதியான, சட்டரீதியான வழிமுறையாகும். கைதைக் கண்டு பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்தாமல் துவண்டு விடாது.

தரம் தாழ்ந்து பேசி, கேவலம் செய்தவனை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்? காலம் உங்களைத் தண்டிக்கும்நாள் வெகு தொலைவில் இல்லை.

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே, துச்சமாக நம்மை எண்ணித் தூறு செய்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’என்று, மேலும் புதிய வேகத்துடன், புதிய எழுச்சியுடன், புதிய போராட்டங்களை பாரதிய ஜனதா கட்சி துணிச்சலுடன் முன்னெடுக்கும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.