இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான நிகழ்வாக திருமணம் கருதப்படுகிறது. இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி காதலித்து நிச்சயிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி இரண்டிலுமே இரு தரப்பிலும் அதாவது ஆண் பெண் தரப்பிலும் ஒரு பதட்டம் கலந்த மகிழ்ச்சி இருப்பது உண்மை! அந்த பதட்டங்கள் அனைத்தும் முழு மகிழ்ச்சியாக திருமண நாளன்று மாறும் உணர்வை திருமணமான அனைவரும் உணர்ந்திருப்பார்கள். அந்த மகிழ்ச்சியோடு புதிதாக திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் தேனிலவிற்கு செல்வது வழக்கமான ஒன்று! அப்படி இளம் தம்பதிகளால் தேனிலவிற்கு செல்ல தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் பெரும்பாலானவை குளிர் பிரதேசங்களாகவும் இதுவரை செல்லாத பகுதியாகவும் இருக்கும். திருமணத்திற்கு அதிக செலவு செய்ய வேண்டாம் என்று நினைக்கும் தம்பதிகள் கூட தேன் நிலவிற்கு அதிக செலவு செய்வார்கள்! ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, லண்டன், நியூயார்க், அந்தமான் என நாட்டை தாண்டி செல்வதை காட்டிலும் நாட்டிற்குள் சுற்றி பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளது அங்கு செல்லலாம் என்ற ஒரு எண்ணத்திலும் தற்போது பலர் காஷ்மீர், சிம்லா, புது டெல்லி, ஆக்ரா, மணாலி, அவுலி,. ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ், அமிர்தசரஸ், சண்டிகர், டல்ஹவுசி, மதுரா, ஜெய்ப்பூர், கோவா, முசோரி போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதனையும் தாண்டி தமிழகத்திற்குள் தேனிலவு பயணத்தை மேற்கொண்டால் போதும் என்ற முடிவை எடுக்கும் இளம் தம்பதிகள் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, குன்னூர், மேகமலை, வால்பாறை, ஏலகிரி, கொழுக்கு மலை போன்ற பகுதிகளுக்கு செல்ல விரும்புவார்கள். இப்படி மலைப்பகுதிகள் நிறைந்த இடத்திற்கு புதிதாக திருமணமான கணவன் மனைவிகள் வெகு தொலைவில் இருந்து வரும் பொழுது பல நேரங்களில் சிக்கலில் சிக்கிக் கொள்வதும் உண்டு. ஏனென்றால் தனக்கு தெரிந்த ஒரு பகுதிக்கு அல்லது இதற்கு முன் சென்ற பகுதிகளுக்கு செல்வது அல்லது இரண்டு மூன்று தம்பதிகள் சேர்ந்து ஒன்றாக சொல்லுவது போன்ற பயணங்களில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணமும் ஏற்படும். ஆனால் ஒரே ஒரு தம்பதி தனக்கு அறிமுகம் அல்லாத ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது அவர்கள் அங்கு தவறாக வழிநடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு அப்படி சொல்லும் பொழுது திருட்டு கும்பல்களிடம் மாட்டி பணப்பறிப்பு மற்றும் அவர்களிடம் உள்ள நகை அனைத்தையும் இழப்பதற்கான சூழ்நிலையில் அந்த இளம் தம்பதிகள் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி போன்ற அடர்ந்த காடுகள் நிரம்பிய பகுதிகளில் அந்த இடத்தை குறித்த அனுபவமும் எந்த ஒரு தகவலும் தெரியாத இருவர் செல்லும் பொழுது பல நேரங்களில் வழி தவறி காட்டுக்குள் சிக்கிக் கொள்வர்.. ஒருவேளை எங்களிடம் மொபைல் போன் உள்ளது அதில் மேப் போட்டு பத்திரமாக நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடுவோம் பாதுகாப்பான ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துள்ளோம் எங்களிடம் பணம் உள்ளது நாங்களே நான்கு சக்கர வாகனத்தை இயக்கி வருகிறோம் அதனால் உங்களை யாரும் தவறாக வழி நடத்த முடியாது என்ற தன்னம்பிக்கையிலும் பல இளம் தம்பதிகள் தனக்கு அறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்வார்கள் அப்படி செல்வதில் ஒன்றும் தவறில்லை ஆனால் சில நேரங்களில் அதுவே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது.
இப்பொழுது அடர்ந்த மலைப் பகுதியான கொடைக்கானல் செல்வதற்கு மாற்று வழிகள் இருப்பதாகவும் அந்த வழிகளில் செல்லும் இளம் தம்பதிகளை குறி வைத்து வழிப்பறியில் அப்பகுதியில் உள்ள கொல்லை கும்பல் ஈடுபடுவதாகவும் சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் இளம் தம்பதிகள் அப்படி தனக்கு அறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும் பொழுது மிகவும் கவனமாகவும் பெரும்பாலான பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வழிகளில் சென்று இரவு நேர பயணங்களை தவிர்த்து தங்களது சுற்றுலாவை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முடித்து வீடு திரும்புவது நல்லது! குறிப்பாக கொடைக்கானலில் சமீப காலமாக ஜோடியாக உலா வருபவர்களை குறிவைத்து பாலியல் தொந்தரவு, வழிப்பறி, சட்ட விரோதமான செயல்கள் நடப்பதாக வேறு அதிகம் புகார்கள் வருகின்றன. இதன் காரணமாக தற்பொழுது கொடைக்கானல் பகுதிக்கு ஜோடியாக செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்ல வேண்டும் எனவும் வேறு எச்சரிக்கப்டுகிறது.