முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 23ம் தேதி அன்று சிங்கப்பூர் சென்ற முதல்வர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 29ம் தேதி காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டு, ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் கேட்டு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் உதயநிதி அறக்கட்டளை போன்ற இடங்களில் வருமான வரி துறையினர் மற்றும் அமலாக்க துறையினர் என அனைத்து துறையினரும் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சென்னையில் நேற்று ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர், இதெல்லாம் பத்தாது என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்றச்செயல்களும், சட்டவிரோத சம்பவங்களும் தமிழகம் முழுவதும் நடைபெறுவதால் மக்கள் அவதியில் இருப்பதாக செய்திகள் அதிகம் உலா வருகின்றன. தமிழகம் இப்படி தகித்துக் கொண்டிருக்கும் பொழுது முதல்வர் ஸ்டாலினின் அயல் நாட்டு பயணம் தேவையா? ஏன் இப்பொழுது செல்ல வேண்டும்? என பல்வேறு விமர்சனங்களையும் எதிர்க்கட்சியினர் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வரின் பயணம் குறித்தும், மேலும் முதல்வரின் உடல்நிலை குறித்து ஒருவித வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் முதல்வர் பயணம் மற்றும் உடல்நிலை பற்றி குறிப்பிட்ட விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ளது.
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, 'இங்க பாருங்க நான் தமிழ்நாட்டு நலனுக்காக இதை நான் பேசியே ஆகணும் முதல்வருக்கு ஞாபக மறதி வியாதி இருக்கு! இதன் காரணமாக அவருக்கு என்ன சொன்னோன்றது அடிக்கடி மறந்துருது! என்ன செய்தோம் அப்டின்றது கூட அடிக்கடி மறந்துவிடுகிறது. முதல்வரின் இந்த ஞாபகம் மறதி வியாதியை பயன்படுத்திக்கிட்டு அதிகாரிகள் எல்லாம் கொள்ளை அடிச்சு குவிக்கிறாங்க, அமைச்சர்கள் எல்லாம் அதை வச்சு விளையாடுறாங்க, முதல்வரை எல்லாருமே சேர்ந்து காமெடி பீஸா மாத்திட்டாங்க! என்ன சொன்னோம் அப்டின்றது முதல்வருக்கு ஞாபகமில்லை! என்ன நடந்தது என்கிற எண்ணம் முதல்வருக்கு ஞாபகம் இல்லை! இது நம்ம உடைச்சு தான் பேசி ஆகணும்! குழந்தை மாதிரி இப்போ இருக்காரு முதல்வர்! அவரை எல்லாம் ஏமாற்றி இதே மாதிரி பண்ணிட்டு இருக்காங்க இப்படியே போனா இது தமிழ்நாட்டுக்கு நல்லது இல்லை' என கூறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவினர் இதற்காக சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகிறார்கள். எப்படி எங்கள் முதல்வரை ஞாபக மறதி வியாதிக்காரர் என கூறலாம்? என திமுகவுக்கு ஆதரவான சமூக வலைதள கணக்குகளில் இருந்து பதிவுகள் இடப்பட்டு வருகின்றன. மேலும் சவுக்கு சங்கர் பேசிய அந்த வீடியோவும் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இப்படி முதல்வரை ஞாபக மறதி வியாதிக்காரர் என சவுக்கு சங்கர் கூறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.