கடந்த சில நாட்களுக்கு முன்னர் லக்னோ சென்றது முதல் அதற்கு தமிழகத்தில் இருந்து சென்றது வரை என்ன நடந்தது என முழு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார், பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், இது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-
சனிக்கிழமை (செப்டம்பர் 4) சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததும், சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணிகளும், பாஜக மகளிரணி தேசியத் தலைவராக கட்சிப் பணிகளும் எனக்கு ஓய்வு என்பதையே இல்லாமலாக்கி வருகின்றன. ஆனாலும் ஓடிக்கொண்டே இருப்பதும், விதவிதமான நிலங்களில் கால் வைப்பதும், விதவிதமான மனிதர்களைச் சந்திப்பதும் எனக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. எத்தனைப் பணிகள் இருந்தாலும் என்னை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த கோவை தெற்கு தொகுதிக்குச் செல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் ஈடானது எதுவும் இல்லை.
எனது தொகுதியில்...: செப்டம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை விமானத்தில் கோவை புறப்பட்டேன். அன்று வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்த நாள். கோவை சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த போது செக்கிழுக்க வைக்கப்பட்டு பெரும் கொடுமைகளை அனுபவித்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செப்டம்பர் 5-ம் தேதி கோவை சிறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வ.உ.சி. இழுத்த செக்கிற்கு மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
வ.உ.சி. யின் 150-வது பிறந்த நாள் என்பதால் முகநூலில் எழுதுவதற்காக கடந்த சில நாட்களாக அவரைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, நாட்டுக்காக அனைத்தையும் இழந்து கடைசியில் வறுமையில் வாடிய அவரது வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை விமானத்தில் பயணிக்கும்போது வ.உ.சி.யின் நினைவாகவே இருந்தது.
கோவை சிறையில் நடைபெற்ற வ.உ.சி. பிறந்தநாள் நிகழ்வில் தமிழக உணவுத்துறை அமைச்சர் திரு அர. சக்கரபாணி அவர்களுடன் கலந்து கொண்டேன். பின்னர் கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டேன்.
நள்ளிரவில் தயாரித்த இந்தி உரை:கோவையில் எனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு உத்தரப்பிரதேச மாநில பாஜக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 5) இரவு 12 மணிக்கு டெல்லி வந்தடைந்தேன். மாநில செயற்குழு கூட்டத்தில் பேசுவதற்கான எனது உரையை தயாரிக்க இணையத்தில் தேடி சிலவற்றை படிக்க வேண்டி இருந்தது. சிலரிடம் பேச வேண்டியிருந்தது. இந்தியில் சில நிமிடங்கள் பேச பயிற்சியும் பெற வேண்டியிருந்தது. இத்தனையையும் முடித்து உறங்கச் செல்லும்போது மணி இரண்டை தாண்டி விட்டது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேசம்: திங்கள்கிழமை (செப்டம்பர் 6) அதிகாலை 5 மணிக்கு எழுந்து தயாராகி 7 மணி விமானத்தைப் பிடித்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோ வந்தடைந்தேன். விமான நிலையத்தில் உ.பி. மாநில மகளிரணி நிர்வாகிகள் அன்பான வரவேற்பு அளித்தனர். அவர்களின் அன்பு மழையில் நனைந்தவாறு மாநில செயற்குழு நடக்கும் இடத்திற்கு புறப்பட தயாரானேன்.
லக்னோவிற்கு ஏற்கனவே மூன்று முறை வந்திருந்தாலும் மகளிரணி தேசியத் தலைவரான பிறகு வருவது இதுவே முதல்முறை. உத்தரப்பிரதேசம் இந்தியாவில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பது, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 2 லட்சத்து 40 ஆயிரத்து 928 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாநிலம். 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதாவது தமிழகத்தைவிட (1,30,058 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் மட்டுமல்ல, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையிலும் இரு மடங்கு பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தரபிரதேசத்தின் மக்கள்தொகை 20 கோடியோ 42 லட்சம்.
தமிழகத்தை விட மூன்று மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம். இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்தான். வாராணசி, அயோத்தி, மதுரா, புத்தகயா, கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் அலகாபாத் என்று புனித தலங்கள் நிறைந்த மாநிலம். ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர் என்று 7 பிரதமர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
மத்தியப்பிரதேசத்தில் பிறந்தவர் என்றாலும் 6 ஆண்டுகள் பிரதமராக இருந்து நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதும் உத்தரப்பிரதேசம்தான்.
லட்சுமணபுரி என்றழைக்கப்படும் தலைநகர் லக்னோ மாநகருக்கும் வரலாற்றில் தனி இடம் உண்டு. அவத் பிரதேசம் என்றழைக்கப்படும் லக்னோ சிக்கன்காரி என்றழைக்கப்படும் வேலைப்பாடுகள் நிறைந்த எம்ப்ராய்ட்ரி சேலை ரகங்களுக்கு புகழ்பெற்ற நகரம். குங்குமப்பூ கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் மட்டுமல்லாது, பிரியாணி, கபாப் போன்ற அசைவ உணவு வகைகளுக்கும் லக்னோ புகழ்பெற்றது.
ஏகாத்ம மானவ தர்ஷன்:பாஜகவைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசம் மிகமிக முக்கியமான மாநிலம். ஜன சங்கம் கட்சியில் தொடக்கம் முதல் இருந்து அதனை முக்கிய சக்தியாக வளர்த்தெடுத்தவரும், 'ஏகாத்ம மானவ தர்ஷன்: (ஒருங்கிணைந்த மனிதநேயம்) என்ற தத்தவத்தை, கொள்கையை அளித்த எங்களின் ஆசான் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயவை கொடுத்த மாநிலமும் உத்தரப்பிரதேசம்தான்.
மனிதன் வெறும் உடலால் ஆனவன் மட்டுமல்ல. உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் கொண்ட ஒருங்கிணைந்த அம்சம்தான் மனிதன். இந்த நான்கு அம்சங்களையும் சிந்தித்து பண்டிட் தீனதயாள் உபாத்தியாய உருவாக்கியதே 'ஏகாத்ம மானவ தர்ஷன்' என்ற தத்துவம். இதுபற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
வெகுவேகமாக பொருளாதாரத்தில் முன்னேறி வரும் உத்தரப்பிரதேசம்:
மக்கள் தொகை நெருக்கம், அரசியல் நிலையின்மை, குடும்ப ஆதிக்கம் நிறைந்த மாநிலக் கட்சிகளின் ஊழல் நிறைந்த ஆட்சி என்று பல்வேறு காரணங்களால் உத்தரப்பிரதேசம் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகவே இருந்தது. உத்தரப்பிரதேச இளைஞர்கள் வேலைதேடி தென்கோடி மாநிலமான தமிழகம் வரை வந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக உத்தரப்பிரதேசம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சி, அமைதி, வளம் நிறைந்த மாநிலம் என்பதால் முதலீடுகள் குவிந்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக உத்தரப்பிரதேசம் வளர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியதில் யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு உலக நாடுகளும் பாராட்டி வருகின்றன.மகளிரணி செயற்குழுவுக்கு வந்திருந்த உத்தரப்பிரதேச பெண் அமைச்சர்கள் மூன்று பேரிடம் நீண்ட நேரம் உரையாடினேன். கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுவதையும் அறிந்து கொண்டேன்.
ஒரு மாநிலத்திற்குள் நான்கு மாநிலங்கள்:உத்தரப்பிரதேச அரசு அம்மாநிலத்தை 75 மாவட்டங்களாகப் பிரித்துள்ளது. பாஜகவில் கட்சி ரீதியாக 94 மாவட்டங்களாகவும், 4 மாநிலங்களாகவும் பிரித்துள்ளனர். ஒரு மாநிலத்தில் 4 மாநிலங்களாகப் பிரிக்கும் அளவுக்கு உத்தரப்பிரதேசம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் உ.பி. மாநில பாஜக மகளிரணித் தலைவராக கீதா சக்கியா நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்.
பாஜக மகளிரணி மாநிலச் செயலாளராக இருந்த அவரை,மாவட்டத் தலைவராக செயல்படும்படி மாநிலத் தலைமை அனுப்பியிருக்கிறது. மாநிலச் செயலாளரில் இருந்து மாவட்டத் தலைவராக நியமித்ததால் வருத்தத்தில் இருந்திருக்கிறார். ஆனால், அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியதோடு, மாநில மகளிரணி தலைவராக்கியுள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை யார் எந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்சிக்காக, மக்களுக்காக எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே பதவிகள் வழங்கப்படுகின்றன. உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் கட்சி பாஜகதான் என்பதற்கு திருமதி கீதா சக்கியாவே உதாரணம்.
ஆங்கில உரையை புரிந்து கொண்ட உத்தரப்பிரதேச பெண்கள்: இரு மாதங்களில் மகளிரணிக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகளை நியமித்து மாநில செயற்குழுவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 800 பேர் கலந்து கொண்ட மாநில செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பாஜக மாநிலத் தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தொடக்க விழாவில் பங்கேற்றார். தொடக்க விழாவில் சில நிமிடங்கள் எழுதி வைத்துக் கொண்டு இந்தியில் பேசினேன். இந்தி பேசும் மிக முக்கியமான மாநிலத்தில் தப்பும் தவறுமாக இந்தி பேசி விடுவோமோ என்ற பயம் இருந்தது. ஆனால், நான் பேசியதை 800 பேரும் கைகளைத் தட்டி உற்சாகமாக வரவேற்றனர். பிறகு ஆங்கிலத்தில் பேசினேன்.
எனது ஆங்கில உரையை மகளிரணி மாநிலப் பொதுச்செயலாளரான டாக்டர் ஒருவர் இந்தியில் மொழிபெயர்த்தார். ஆனால், சில நிமிடங்களிலேயே செயற்குழுவில் பங்கேற்ற பெண்கள் மொழிபெயர்ப்பு வேண்டாம். வானதி சீனிவாசனின் ஆங்கிலமே புரிகிறது என்று கூறிவிட்டனர். அதனால், மொழிபெயர்ப்பு இல்லாமல் பேசினேன். எனது உரையைப் புரிந்து கொண்டு பல இடங்களில் கைகளைத் தட்டி வரவேற்றனர்.
உத்தரப்பிரதசத்தில் இரு துணை முதல்வர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தினேஷ் சர்மா. லக்னோ மாநகரின் முன்னாள் மேயர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய இளைஞர் ஆணையம் அமைக்கப்பட்டது. 4 பேர் கொண்ட ஆணையத்தில் தினேஷ் சர்மாவும், எனது கணவர் திரு. சீனிவாசனும் இருந்தார்கள். எனவே, தினேஷ் சர்மா எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். அடிக்கடி அவருடன் பேசும் வாய்ப்பும் கிடைப்பதால் அவருடனான நட்பு தொடர்கிறது. மாநில செயற்குழுவில் பேசிய அவரும், என் நண்பர் சீனிவாசனின் மனைவி என்று என்னை குறிப்பிட்டு பழைய சம்பவங்கள நினைவுகூர்ந்தார்.
மதிய உணவுக்குப் பிறகு மற்றொரு துணை முதல்வரான கேசவபிரசாத் மவுரியா கலந்து கொண்டார். மிக சாதாரண ஊழியராக பாஜகவுக்கு வந்தவர் இன்று துணை முதல்வர் அளவுக்கு உயர்ந்துள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ., துணை முதல்வர் என்று கடந்த 10 ஆண்டுகளுக்குள் அரசியலில் பெரும் உச்சத்தை தொட்டவர்.
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்:
மாநில செயற்குழுவின் நிறைவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கோவை தெற்கு தொகுதியில் எனக்காக பிரச்சாரம் செய்ய வந்தபோது அவருடன் அறிமுகம் ஏற்பட்டது. "எனக்காக கோவை வந்து பிரச்சாரம் செய்ய வந்த உங்களுக்கு இப்போதுதான் நேரில் நன்றி சொல்ல முடிந்தது" என்றுகூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன். மிகவும் மகிழ்ந்தார்.
மாநில செயற்குழுவில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்ததை நினைவு கூர்ந்ததோடு, என்னைப் பற்றி அவர் பேசிய வார்த்தைகள் என்னை நெகிழச் செய்துவிட்டது. என்னைப் பாராட்டி இந்த அளவுக்கு பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை."பாஜகவுக்கு சிறிதும் ஆதரவு இல்லாத மாநிலத்தில், பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லாத மாநிலத்தில், பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாத மாநிலத்தில் தன்னந்தனியாக, தன்னம்பிக்கையோடு பாஜக கொடியை கையில் போராடி வெற்றி பெற்றிருப்பவர் திருமதி வானதி சீனிவாசன். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எதையும் பொருட்படுத்தாமல் தோல்வியைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டு்ம் போராடி சாதித்துக் காட்டியிருக்கிறார். அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படிப்பட்டவர் இன்று பாஜக மகளிரணி தேசியத் தலைவராக இருப்பது பொருத்தமானது. பாஜக மகளிரணியினர் வானதி சீனிவாசனை உதாரணமாகக் கொண்டு செயல்பட வேண்டும்" என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் முதலமைச்சரான அவர், "வானதி சீனிவாசனை உதாரணமாகக் கொள்ள வேண்டும்" என்று என்னை பாராட்டிப் பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்னால் அவருக்கு ஆகப்போவதும் எதுவும் இல்லை. ஆனால், பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலத்தில் இருந்து ஒருவர், அதுவும் பெண்மணி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார், பாஜக மகளிரணி தேசியத் தலைவராகி இருக்கிறார். அப்படிப்பட்டவரை ஊக்குவிக்க வேண்டும், மேலும் பணியாற்ற உற்சாகமளிக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் பேசியிருக்கிறார்.
முதலமைச்சரும், துறவியுமான அவரது பாராட்டுக்களை மிகப்பெரும் விருதாக நினைத்து மகிழ்கிறேன். 'வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்' பெற்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். 2021 செப்டம்பர் 6-ம் தேதியையும், லக்னோவில் நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநில பாஜக மகளிரணி செயற்குழு கூட்டத்தையும் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக்கி விட்டார் யோகி ஆதித்யநாத். அந்த மகிழ்ச்சியோடு லக்னோவிலிருந்து டெல்லி வந்து சேர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார் வானதி சீனிவாசன்.