24 special

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு... திட்டம் போட்டு குழப்பிய அரசு..? புலம்பி வரும் பயணிகள்!

Stalin, Kilambakkam
Stalin, Kilambakkam

சென்னையில் வெளியூர் செல்லும் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பொங்கலை முன்னிட்டு திறந்த அந்த பேருந்து நிலையம் ஆரம்பத்தில் இருந்து பயணிகளுக்கு முறையான பேருந்துகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், வெளியூர் செல்லும் பயணிகள் தமிழக அரசு மீது கடும் விமர்சனத்தை வைத்தனர். போதிய வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்ததால் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு வந்தது.


பொங்கல் பண்டிகை முடிந்த பின் தமிழக அரசு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்போவதில்லை என்றும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டது. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் என்னவாகும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. அதோடு, அந்த இடத்தில் ஐடி நிறுவனங்கள், விளையாட்டு அரங்கங்கள் வரப்போவதாக சில தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும், அந்த இடத்தில லூலூ மால் வரப்போவதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் சேகர்பாபு அந்த இடத்தில பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பேருந்து நிலையத்திற்கு படையெடுத்தனர். ஆனால், திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அத்துடன்,கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் ஆத்திரம் அடைந்த பயணிகள், பேருந்துகளை சிறைபிடித்தனர். இதனை தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். எனினும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

இது குறித்து பயணிகள் கூறுகையில், “நாங்கள் திருச்சியை சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்ல இங்கு வந்திருக்கிறோம். ஆனால் இங்கு பஸ் கிடைக்கவில்லை. எங்கள் கிராமங்களுக்கு பஸ்ஸை கேட்கவில்லை, முக்கியமான நகரமான திருச்சிக்குதான் பஸ் கேட்கிறோம். குறைந்தபட்சம் 5000 பேராவது இங்கு இருப்போம். இதுவரை திருச்சிக்கு என 25 பேருந்துகள்தான் சென்றிருக்கிறது. நான் நேற்றிரவு 10 மணிக்கு இங்கு வந்தேன். தற்போது விடியற்காலை 3.15 மணி ஆகிவிட்டது. இதுவரை திருச்சிக்கு பஸ் கிடைக்கவில்லை. பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் இருக்கைகள் புல் ஆகி வருவதால் சிரமம் ஏற்படுவதாகவும் இங்கிருந்து எங்கள் ஊருக்கு மொத்தமே 5 மணி நேரம்தான். ஆனால் பேருந்துக்காக 6 மணி நேரமாக காத்திருக்கிறோம்” என கூறினார்கள்.

இதுவரை இது குறித்து அரசு தரப்போ அல்லது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த பிரச்சனை தொடர்பாக எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதால் மக்களை நன்றாக குழப்பி வருகின்றனர் இதனால் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் கற்பித்து கொடுப்பார்கள் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. அடுத்ததாக திண்டிவனத்தில் ஒரு பேருந்து நிலயத்தை கட்டி தென் மாவட்டங்களுக்கு என்று தனியாக பிரித்து கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று மக்கள் புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து நிறுத்த இட வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது.