பாஜக தொண்டர்களுக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம் ஒன்றிணை எழுதியுள்ளார் அதில் முரசொலியில் வந்த விவகாரம் குறித்தும் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருக்க நான் ஐபி எஸ் படித்தேனா இல்லையா? என்பதுதான் இப்போது அவர்களின் மிகப்பெரிய விஷயமாக உள்ளதாக பாஜகவினருக்கு எழுதிய கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அண்ணாமலை எழுதிய கடிதம் பின்வருமாறு : முரசொலி. இது கோபாலபுரம் குடும்பத்தினருக்கு சொந்தமான, திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கை.
இதில் கேள்வி பதிலாக ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் 1959 இல் யார் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள் என்ற உண்மை தெரியாமல் நான் பேசுவதாக, எக்களிக்கிறார்கள். எப்படி இவனெல்லாம் ஐபிஸ் படித்தான் என்று நையாண்டி பேசுகிறார்கள்.
இப்போது திமுக ஆட்சியின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நான் ஐபிஎஸ் எனும் இந்திய காவல் பணி படிப்பை படித்தேனா? இல்லையா? என்பதே. திமுக ஆட்சியின் அபத்தங்களையும், அவலங்களையும் எடுத்துச் சொல்வதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர்கல்வி படித்தவர்கள்தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண பாமர மக்களுக்குக் கூட மிக நன்றாகத் தெரியும் திமுகவின் ஆட்சி எத்தனை கேவலமாக நடந்து கொண்டிருக்கிறது என்று.
1959ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி திருமதி இந்திரா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்கள் அரசுக்கு இரண்டு ஆண்டுகாலம் பூர்த்தி அடைந்திருந்தது.அந்த காலகட்டத்தில் இந்திராகாந்தி அம்மையார் ஆளும் ஆட்சிப் பொறுப்பிலோ இன்னும் வேறு எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லை ஆனால் கட்சித் தலைவராக மட்டும்தான் இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் வழக்கப்படி, அரசு பதவியில் இல்லாதவர்கள், தங்கள் குடும்ப ஆட்சியில் செய்யும் அத்தனை அத்துமீறல்களையும், இந்திரா காந்தி அவர்கள் அன்றே செய்தார். ஆகவே தன் தந்தையார் ஜவஹர்லால் நேருவிடம் எடுத்துக்கூறி தான் தலைவராகப் பதவியேற்ற இரண்டே மாதங்களில், தன் தந்தையாரிடம் வலிந்து கூறி, சண்டையிட்டு, கேரளா கம்யூனிஸ்டு ஆட்சியை கண்டிப்பாக கலைக்க வேண்டும் என்று எடுத்துக்கூறி அதை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களே.
இதற்கு இணையத்திலும் இன்னும் பல பத்திரிக்கைச் செய்திகளிலும், நூல்களிலும் ஆவணங்கள் இருக்கின்றன. வரலாறு தெரிந்த ஒருவர் கூடவா அங்கில்லை. இதை எப்படி திமுக அரசு மறுக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. உலகில் முதன் முறையாக ஜனநாயக முறைப்படி ஒரு கம்யூனிஸ ஆட்சி கேரளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் அன்று அதிர்ந்து போயின.
ஆனால் டெல்லியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அது பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி இந்திரா காந்தி அவர்கள், திரு நம்பூதிரிபாட் அவர்களின் ஆட்சியை கலைத்துவிட்டு அங்கே, கம்யூனிசத்தை வலுவிழக்கச் செய்து காங்கிரசை முன்னெடுக்க முயற்சி செய்தார்.
திருமதி இந்திரா காந்தி அவர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, மாற்று கருத்து இருந்தாலும் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தியின் அழுத்தத்திற்கு பணிந்து, கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார். இது வரலாறு. இந்த வரலாறு கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுப் பதிவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. வரலாறு என்பது அறிவு பூர்வமான விஷயம். அதற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறிவாலயம் என்பது கட்டிடத்திற்கு மட்டும் பெயராக இருக்கிறது.
எது மக்களுக்கு தேவையான முக்கியமான பிரச்சனையோ அதை விட்டு விட்டு சம்மந்தமில்லாத விசயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி, தங்கள் ஆட்சியில் அவலங்களை, மறைக்கின்றோம் என்ற பெயரில் திமுக அடிக்கும் கூத்து, அறிவுபூர்வமாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காமெடியாக பொழுது போக்க நினைப்பவர்களுக்கு, திமுக நல்ல நேரப்போக்கு.
தமிழக மக்களை எல்லாம், எதைச் சொன்னாலும் நம்பக்கூடிய ஏதுமறியாதவர்கள் என்ற இறுமாப்பு நினைப்பிலே திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது போலும். தொடர்ந்து ஆதாரமில்லாத, பொய் புரட்டு செய்திகளை திரும்பத் திரும்பச் சொல்லுவதால், அவையெல்லாம் உண்மையாகிவிடும் என்று இவர்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சிந்திக்க வைக்கும் சிலேடைப் பேச்சுக்களுடன், தரமான அரசியல் கருத்துக்களை முன் வைத்த, முரசொலி நாளேடு, இப்படி கூமுட்டை, சாவட்டை என்று கண்ணியக்குறைவாக தனிநபர் தாக்குதல் நடத்தும், நாலாந்தர நாளேடாக மாறிப்போனதை எண்ணி, ”எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேனே” என்று கருணாநிதி அவர்களின் முரசொலிகூட முகம் சுளிக்கும்.
மக்கள் திமுகவின் பொய் புரட்டு செய்திகளை, பிரிவினைவாத செய்திகளை, மக்களை பதட்டப்படுத்தும் செய்திகளை, தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்தால், அவர்களின் ஊழல்களையும், ஆட்சியில் செய்யும் அபத்தங்களையும், மக்கள் மறந்து திசை திரும்பி விடுவார்கள் என்று இந்த ஊடகப் பெருக்கக் காலத்தில் நம்பிக் கொண்டிருப்பது வேடிக்கை.
ஏழை எளிய மக்களை ஆசை காட்டி, ஏமாற்றி, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு அவர்களை எல்லாம் அனலில் இட்ட புழுவாய் தவிக்க விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அறிவாலய திமுக அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றத் திராணி இல்லாமல், வெறும் வெட்டி வாய்ச்சவடால் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் மக்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. மக்களின் துன்பங்கள் தீரப் போவதில்லை, என்று என் கவலை எல்லாம் தமிழ் நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அவர்கள் கவலை எல்லாம் நான் ஐபிஸ் படித்தேனா என்பதே என குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.