24 special

டார்க் ரூம் டெட் சிசிடிவி 18 ஹார்ட் டிஸ்க் திருட்டு செந்தில் பாலாஜியைக் காப்பாற்ற மாஸ்டர் பிளானா மின்வாரியத்தில் பகீர் சம்பவம்

PMMODI
PMMODI

திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) ₹397 கோடி மதிப்பில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட மிக முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மின்வாரியத்தின் பொருள் மேலாண்மைத் துறையில் உள்ள நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய டிஜிட்டல் தரவுகளே திருடர்களின் முதன்மை இலக்காக இருந்துள்ளன. காகித ஆவணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான சாஃப்ட் காப்பிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மே 30-ம் தேதி பல்வேறு பிரிவு ஊழியர்கள் தங்கள் கணினிகளில் திட்டக் கோப்புகள் காணாமல் போயிருப்பதை உணர்ந்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கணினி நெட்வொர்க் நிர்வாகிகள் மூலம் சோதனை செய்யப்பட்டபோது, 4, 5, 7 மற்றும் 10-ம் தளங்களில் உள்ள அலுவலகங்களில் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் தனியாகக் கழற்றித் திருடப்பட்டிருப்பது உறுதியானது. இதுவரை 8 ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து மட்டுமே முறையான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. பல உயர் அதிகாரிகள் இன்னும் காவல்துறைக்குச் செல்ல தயக்கம் காட்டி வருவது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இருப்பினும், டெண்டர் மற்றும் கொள்முதல் பிரிவைச் சேர்ந்த 8 அதிகாரிகள் எழுத்துப்பூர்வ புகார்களை அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், மின்வாரிய தலைமையகத்தின் முக்கியப் பிரிவுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்பதுதான். இடைத்தரகர்களின் நடமாட்டத்தை மறைக்கவே கேமராக்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை பலமுறை கேமராக்கள் பொருத்த பரிந்துரை செய்தும், "செலவு அதிகம்" எனக் கூறி கட்டிடப் பிரிவு அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதும் இப்போது அம்பலமாகியுள்ளது.

இந்தத் திருட்டு, மின்சார துறையில்  டெண்டர் முறைகேடு விவகாரங்களுக்கு மத்தியில் நடந்துள்ளது. மின் உருமாற்றிகள் கொள்முதலில் 397 கோடி ரூபாய் ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 2021-2023 காலகட்ட டெண்டர்கள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளை அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. இந்த முக்கிய ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.