தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனமும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது என இரண்டு முக்கிய மாற்றங்கள் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல சர்வதேச அரசியல் தொடர்புடையது என தெரிவித்துள்ளார் எழுத்தாளர் சுந்தர்ராஜசோழன், இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
திரு.அண்ணாமலை தன் லங்கா விஜயத்தை கொண்டு போகும் விதம் ஆச்சர்யப்படுத்துகிறது நம்மை. அங்கே அவருடைய செயல்பாடுகளும், தேர்ந்தெடுத்து பேசும் வார்த்தைகளும் பல்லாயிரமாண்டு பண்பாட்டு அடையாளங்களை அரசியல் தளத்தில் மீள்கட்டமைப்பதாக அமைந்துள்ளது.
அண்ணாமலையின் லங்கா விஜயத்தில் தன்னுடைய முதல் பயணமாக நுவரெலியாவில் உள்ள ஹனுமன்,சீதா மாதா கோவிலுக்கு சென்று வழிபட்டார், இராவணனால் சீதையம்மாவை சிறைபிடித்து வைக்கப்பட்ட அசோகவனம் இதுதான் என நம்பப்படும் இடத்திலிருந்தே தன் பயணத்தை துவங்கினார்.
இது பாரதத்திற்கும்,இலங்கைக்குமான பல்லாயிரமாண்டு பந்தமுள்ள பகுதி இராவணனால் துன்புற்ற சீதாதேவியின் நலமறிந்து,ஸ்ரீராமரிடம் ஹனுமன் தூது சென்றார்.அதே குறியீடு இப்போதைய அரசியல் சூழலிலும் உள்ளது.
'ஹனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்து இலக்குமணனை காத்தது போலே, நரேந்திர மோடி இலங்கை மக்களை காக்க முயற்சிக்கிறார் ஸ்ரீராமனுக்கு பாலம் கட்ட உதவிய அணில் போலே நானும் எனது ரத்தத்தின் ரத்தமான மக்களுக்கு உதவ நினைக்கிறேன்' என்கிறார் அண்ணாமலை.
முழுக்க முழுக்க இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கலாச்சார தொடர்பின் வழியே,தனது வலுவான அரசியல் இலக்கை விளக்கும் அண்ணாமலை,தன் வயதை விட பெரிதாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.
நமக்கும் இலங்கையருக்குமான நல்லிணக்கத்தை,கலாச்சார உறவை,பாரதத்தின் குருதி வழி சகோதரத்துவத்தை மேலும் வலிமைப்படுத்துவதாக உள்ளது அவரது பேச்சு மேலும் இந்தியாவை சர்வ வல்லமையோடு ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கட்சியில், தமிழக பாஜக தலைவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதையும் இந்தப் பயணம் உறுதி செய்கிறது.
இலங்கை அரசியலானது உலக நாடுகளால் நேரடியாக கண்காணிப்படுவது. ஹிந்து மகா சமுத்திரத்தில் தன் அதிகாரப்பரவலை நீட்டிக்க உலக வல்லாதிக்க நாடுகள் கழுகு போல சுற்றி வருகிற வேளையில் ஒரு மாநிலத் தலைவரான அண்ணாமலையை தூதுவர் போலே அங்கே பாஜக அனுப்புகிறது என்றால், அண்ணாமலையின் இடம் பாஜக மாநில தலைவர்களிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள்(LTTE) தலைவர் பிரபாகரன் 2001 - 2002 காலத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்(CWC) ஆகியோர்களை ஒரு புள்ளிக்கு கொண்டு வந்து தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக நினைத்தார்.
ஆனால் 2004 ல் இந்தியாவில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடனேயே,இதெல்லாம் கைகூடாமல் அங்கே இறுதியுத்தத்தை நோக்கி களம் நகர்ந்தது. பாஜக ஆட்சி 2004 ல் மீண்டும் அமைந்திருந்தால் நிச்சயமாக இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை பலிகளே இல்லாமல் நடந்திருக்கும்.
தற்போது 2014 ல் மோடி ஆட்சி வந்த பிறகு இந்திய வம்சாவழி தமிழர்களுடன் நெருக்கமான உறவை இந்திய அரசு மேற்கொள்கிறது.அது போல வீடுகட்டி தமிழர்களை குடியமர்த்துவதில் அதீத ஆர்வத்தை காட்டி அதை சாதித்துக் காட்டியுள்ளது மோடி அரசு.
முன்பு ஒரு புள்ளியில் இணைந்து செயல்பட முடியாமல் சதியால் பிளக்கப்பட்ட தமிழ் தலைவர்களை,ஒரே தளத்துக்கு கொண்டு வர இன்று பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றிருப்பது மிக முக்கியமான அரசியல் திருப்புமுனை.இன்று இலங்கைக்கு வந்திருக்கும் நிலையற்ற அரசியல் சூழலில் கூட சிங்கள - தமிழர் உறவை பேணுவதிலும்,தமிழர்களுக்கான 13 வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதிலும் தீவிரமாக உள்ளது இந்திய அரசு என்பதையே இது காட்டுகிறது.
இந்திய ரா போன்ற அமைப்புகள் செய்யும் பணியை, இன்று ஒரு மாநிலத் தலைமை முன்னின்று அங்கே போய் செய்வதை பார்த்தால், பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமனமும் சரி, ஆளுநர் RN ரவி நியமனமும் சரி,வெறுமனே அரசியல்,நிர்வாகம் சார்ந்து மட்டுமே இல்லை நம் கண்ணுக்கு அகப்படாத,அறிவுக்கு புலப்படாத சர்வேத அரசியல் சூட்சுமங்கள் ஒளிந்திருக்கும் நியமனங்கள் இவை என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.