பல்வேறுவிதமான இணையதள மோசடிகள் அரங்கேறி வருவதால் தேவையில்லாத லிங்கை கிளிக் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் யுகத்தில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை பாதுக்காக்க பலவகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதைவிட புதுப்புது டெக்னிக்குகளைப் பயன்படுத்தி ஹேக்கர்களும், ஆன்லைன் மோசடி கும்பலும் பணத்தை திருடி வருகின்றனர். இந்நிலையில் புதுவிதமான ஆன்லைன் மோசடி குறித்து டிஜிபி சைலேந்திர பாபு மக்களை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ உங்கள் வங்கி கணக்கிற்கான நெட் பேங்கிங் விரைவில் காலாவதி ஆக உள்ளது. எனவே அதனை புதுப்பிக்க உங்கள் பான் எண்ணை உடனடியாக அப்டேட் செய்யுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் எனக்குறி ஒரு லிங்கை தருவார்கள். நீங்களும் எங்கே நெட் பேங்கிங் வசதி முடங்கிவிடுமோ என பதறியடித்துக்கொண்டு அந்த லிங்கை கிளிக் செய்வீர்கள்.
அதனையடுத்து ஓபன் ஆகும் பக்கத்தில் உங்களுடைய பெயர், பாஸ்வேர்ட், மொபைல் எண் போன்ற தகவல்களை எல்லாம் கேட்பார்கள். அதன் பின்னர் ஏடிஎம் தொடர்பான விவரங்கள், ஓடிபி ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டு, உங்களுடைய அக்கவுண்டில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்து விடுவார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வந்த இந்த மோசடி தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. எந்த வங்கியில் இருந்தும் நெட் பேங்கிங் தொடர்பான விவரங்களை கேட்கவே மாட்டார்கள். அப்படி கேட்டால் நிச்சயமாக அது மோசடியாக தான் இருக்கும். எனவே அதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
அந்த லிங்கை தொட்டால் உங்களுடைய மொத்த பணமும் பறிபோக நேரிடும் எனவே காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கிறோம். எக்காரணம் கொண்டும் தவறான லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள் என எச்சரித்துள்ளார்.
- அன்னக்கிளி