24 special

நவம்பர் 17 கோவையில் அதிரடி "அறிவிப்பை" வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி...!

Dr.krishnasamy
Dr.krishnasamy

நவம்பர் 17 கோவையில் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அமைதி பேரணி நடைபெறும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார் இது குறித்து கிருஷ்ணசாமி குறிப்பிட்டதாவது,


சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு 'நவம்பர் 17' ஆம் தேதி கோவையில் 'அமைதி பேரணி மும்பைக்கு அடுத்தபடியாக கோவை மிகப்பெரிய தொழில் நகரமும், மாவட்டமும் ஆகும். தென்னிந்தியாவின் ’மான்செஸ்டர்’ என்ற பெயரும் கோவைக்கு உண்டு.

1998 ஆம் ஆண்டு கோவை மாநகர் மற்றும் பல புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட தொடர் வெடிகுண்டு விபத்துக்களால் பெரும் உயிரிழப்புக்களும், மிகப்பெரும் பொருளாதார சேதமும், அதைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் தொழில் மற்றும் வணிக வீழ்ச்சிகளும் ஏற்பட்டன.

இந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய நாள் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட கார் வெடிப்பு, அதில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், அதைத் தொடர்ந்து கார் வெடிப்பில் இறந்தவர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட அதிநவீன வெடி பொருட்கள் ஆகியவை கோவை மாநகரை மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு இரையாக்கத் திட்டமிடப்பட்டது தெளிவாகிறது.

அதிர்ஷ்டவசமாக அன்றைய வெடி விபத்து எவ்விதமான உயிர், பொருளாதார சேதத்தையும் உருவாக்கவில்லை. ஒருவேளை அது வேறு இடத்தில் நிகழ்ந்திருந்தால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி, கோவை மாநகரின் அமைதியையும் சீர்குலைத்து இருக்கும். 1998 முதல் கோவை மாநகரம் தொடர்ந்து இது போன்ற வெடிகுண்டு கலாச்சாரத்தின் மையமாகத் திகழ்வதும் இன, மத மோதல்களுக்கு உண்டான தளமாகவும் களமாகவும் உருவாகி உள்ளது.

இது கோவை மாவட்டத்திற்கு மட்டுமே பாதிப்பை உண்டாக்கும் என்று கருதி விட முடியாது. இதனுடைய தொடர்புகள், தொடர்ச்சிகள் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கலாம்.

எனவே வெடிகுண்டு மற்றும் இன, மதக் கலவரங்களுக்குக் கோவை மாநகரை கேந்திரமாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, கோவை மாநகரை அனைவரும் சந்தோசத்துடன், மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும்  வாழ்ந்திடும் தலமாக மாற்ற வேண்டிய பொறுப்பு கோவை மாவட்ட ஒவ்வொரு குடிமகனுக்கு உண்டு.

எனவே, கோவை மாநகரில் நிரந்தரமாக அமைதியை சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு  நவம்பர் 17ஆம் தேதி கோவையினுடைய அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், மத மற்றும் சமுதாய அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக் கூடிய வகையில் ஒரு அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி முழுக்க முழுக்க அரசியல், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கோவையின் பாரம்பரிய அமைதியையும், தொழில், வணிக செழுமையையும் மீட்டெடுக்கும் பொருட்டு நடைபெறக்கூடிய ஒரு மக்கள் இயக்கம் ஆகும்.

கோவையில் வாழக்கூடிய அனைத்து மக்களிடத்திலேயும் மத, இன ரீதியான எல்லா விதமான கசப்புணர்வுகளையும் அகற்றிவிட்டு; அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்வதற்கு உண்டான இடமாக அமைந்திட வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தை விதைப்பதற்கு எடுக்கப்படும் ஒரு பெரிய முயற்சி ஆகும். எனவே, இதில் பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மத அமைப்புகள் உட்பட அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.