"நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவர் கூறியது படி இந்த உலகமே தண்ணீரால் இயங்கிக் கொண்டு உள்ளது. இந்த உலகத்தில் வாழும் செடி கொடிகளில் தொடங்கி மனிதர்கள் வரை அனைத்து உயிரினங்களும் தண்ணீரையே சார்ந்து வாழ்ந்து கொண்டு உள்ளது. செடி வளர்வதற்கு தண்ணீர் ஊற்றினால் அது வளர்ந்து நமக்கு காய், கனி போன்றவற்றை கொடுத்து மரமாக மாறுகிறது. அந்த காய்கறி மற்றும் பழங்களை மனிதர்களும் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் தண்ணீரையும் பல நேரங்களில் எடுத்து உட்கொள்கின்றனர். இது போன்று தண்ணீர் பல வகையாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது தண்ணீரின் முக்கியத்துவம் தெரியாமல் நாம் அனைவரும் பல வகைகளில் வீணாக்கிக் கொண்டு வருகிறோம். நாம் அருந்தும் தண்ணீரில் இயற்கையாகவே பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இயற்கையாக நமக்கு கிடைக்கும் தண்ணீரை அருந்தினாலே எந்த வித நோய்களும் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் இப்போது பல கார்ப்பரேட் கம்பெனிகள் தண்ணீரை பயன்படுத்தி அவர்களின் வியாபாரங்களை பெருக்கிக் கொண்டு வருகிறது.
குடிக்கும் தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கும் நிலை தற்போது உருவாகிக் கொண்டு உள்ளது. இந்த கம்பெனிகள் அவர்களின் வியாபாரத்தை பெருக்குவதற்காக பல வகையான விளம்பரங்களின் மூலம் மினரல் வாட்டர் என்பது மிகவும் சத்து நிறைந்த தண்ணீர் போன்று விளம்பரங்கள் செய்து மக்களை நம்ப வைக்கின்றனர். சாதாரண மக்களோ அதைப்பற்றி தெரியாமல் அந்த விளம்பரங்களை பார்த்தவுடன் இதில் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்து விட்டு அதன் பின் அந்த தண்ணீரையே விலை கொடுத்து கடைகளில் வாங்கி தாங்களும் பருகி தங்களின் பிள்ளைகளுக்கும் கொடுத்து வருகின்றனர். இயற்கையாக இலவசமாக நமக்கு கிடைக்கும் தண்ணீரை விட்டுவிட்டு இப்படி விலை கொடுத்து வாங்கும் தண்ணீர் உண்மையிலேயே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதா??? இது குறைத்து ஆராய்ச்சிகள் நடத்தப்படும் போதுதான் திடுக்கிடும் உண்மைகள் வெளியே வருகிறது!!!
தமிழகத்தில் விற்கப்படும் மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் கேன் தண்ணீரில் மனித உடலுக்கு தேவையான தாது பொருட்கள் குறைவாக உள்ளது என்று தகவல் வெளிவருகிறது. நாம் விலை கொடுத்து வாங்கும் மினரல் வாட்டர் மிகவும் சுவையாக இருக்கும் இதற்காக அந்த நிறுவனங்கள் தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதில் உள்ள ஆகச் சிறந்த தாது பொருட்கள் வெளியேறி விடுகிறது. இதனால் மனிதர்கள் அருந்தும் தண்ணீரில் கிடைக்கும் தாது பொருட்களின் அளவு குறைவதால் அவர்களுக்கு பலவகையான நோய்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி ஆகிய மூன்றும் இணைந்து 30 பிரபல கேன் தண்ணீர்களை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதன்படி தமிழகத்தில் விற்கப்படும் கேன் தண்ணீர்கள் சோடியம் அளவு மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
சாதாரணமாக உள்ள தண்ணீரில் 1 லிட்டருக்கு 78 மீ.கி கிராம் அளவுக்கு சோடியம் இருக்க வேண்டும், ஆனால் இந்த கேன் தண்ணீரில் 14 மி.கி அளவுதான் சோடியத்தின் அளவு உள்ளது. இவ்வாறு குறைந்த சோடியம் உள்ள தண்ணீரை குடிப்பதினால் வயிற்றுப்போக்கு, பக்கவாதம், நற்றினை சுரப்பியில் குறைபாடு ஏற்படும் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றது. மேலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 188 மி.கி கால்சியம் இருப்பதற்கு, 3.5மி.கி தான் இருக்கிறது. இப்படி ஒருவர் கால்சியம் குறைந்த தண்ணீரை குடிப்பதினால் பல் நோய், எலும்புகள் குறைபாடு போன்றவை வரும். மேலும் மெக்னீசியமும் குறைவாக உள்ளதால் சிறுநீரகத்தில் கல் உருவாகுதல், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் என்றும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது!! இப்படி எல்லா சத்துக்களும் குறைவாக இருக்கும் இந்த கேன் தண்ணீர்களை காசு கொடுத்து வாங்குவது நோயை விலை கொடுத்து வாங்குவது போன்று உள்ளது!!