24 special

ஓட்டுநர் கொலை..! தலைமறைவான எம்.எல்.ஏ..!

jagan mohan reddy
jagan mohan reddy

காக்கிநாடா : ஆந்திர ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.சி.பி எம்.எல்.சி  அவரது ஓட்டுனரை கொன்ற வழக்கில் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். ஒரு எம்.எல்.சியே கொலைவழக்கில் தலைமறைவாகியிருப்பது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் ஆளும்கட்சி எம்.எல்.சியாக இருப்பவர் ஆனந்த் உதய பாஸ்கர் என்ற ஆனந்த் பாபு. இவரிடம் மூன்றுமாதங்களுக்கு முன்புவரை ஓட்டுநராக இருந்தவர் சுப்பிரமணியம். கடந்த வியாழக்கிழமை சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்ற ஆனந்த்பாபு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறி அழைத்துசென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சுப்பிரமணியன் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டதாக கூறி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். சுப்பிரமணியன் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது மனைவி அபர்ணா காக்கிநாடா காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் பிஜேபி மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் இது அரசியல் படுகொலை எனவும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோஷமிட தொடங்கினர். இதனிடையே சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க சுப்பிரமணியன் மனைவியிடம் கையெழுத்து கேட்டனர். ஆனால் வழக்கு பதியாமல் ஒப்புதல் அளிக்க முடியாது என கறாராக கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து சந்தேகத்திற்குரிய கொலைவழக்காக பதிவு செய்த போலீசார் ஆனந்த் பாபுவை கைதுசெய்ய காக்கிநாடா விரைந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது. காக்கிநாடா எஸ்பியான ரவீந்திரநாத் கூறுகையில் " முதலில் சந்தேகத்துக்குரிய மரணம் என செக்சன் 174ன் கீழ் வழக்கு பதியப்பட்டது.

சுப்பிரமணியன் சாலை விபத்தில் இறந்ததாக கூறப்படும் நாகமல்லி தோட்டசாலையில் சர்ப்பவரம் போலீசார் சோதனை நடத்தினர். அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் இந்த வழக்கு இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் பதியப்படும். இறந்தவர் தலித் என்பதால் எஸ்சி.எஸ்டி சட்டமும் பாய உள்ளது" என எஸ்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.