நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை 3வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் களப்பணியை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய இலக்குகளை நிர்ணயித்து தேர்தல் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதல் அடியை எடுத்துவைத்து தமிழகம் முழுவதும் தனது நடை பயணத்தை தொடங்க உள்ளார்.
ராமேஸ்வரத்தில் அண்ணாமலை தொடங்கவுள்ள நடை பயணத்தை பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தொடங்கிவைக்கவுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் 28, 29 ஆம் தேதிகளிலும், 30 ஆம் தேதி பரமக்குடியிலும், 31 ஆம் தேதி திருவாடானை, சிவகங்கை தொகுதியிலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருப்பத்தூரிலும் நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கன்னியாகுமரி சென்றடைகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபயணம் சென்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவுள்ளார். ஜனவரி மாதம் சென்னையை நெருங்கும் அண்ணாமலை, ஜனவரி 5 ஆம் தேதி ஆவடி, மாதவரம், பொன்னேரி, குமுடிப்பூண்டி என ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் தனது நடை பயணத்தை முடிக்கவுள்ளார்.
முதல் நாளில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பது குறித்து தற்போது தற்போது அதிகார தகவல்கள் வெளிவந்துள்ளன...! தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக அமித்ஷா டெல்லியில் இருந்து விமானத்தில் நாளை 4.50 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பிற்பகல் 5 மணிக்கு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து காரில் ராமேசுவரம் செல்லும் அவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 5.45 மணி அளவில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து கலந்துகொள்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கிடையே நடைபயணம் தொடங்கியதும் ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து அண்ணாமலை குறைகளை கேட்கிறார். அண்ணாமலையும் இரவில் ராமேசுவரத்தில் தங்குகிறார்.
நாளை மறுநாள் அதாவது 29-ந்தேதி காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் செல்கிறார். மாலை ராமநாதபுரம் நகரில் நடைபயணம் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். அன்று இரவு ராமநாதபுரத்திலேயே தங்குகிறார். வருகிற 30-ந்தேதி அன்று காலை முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், பிற்பகலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கும் செல்கிறார். அன்று இரவு பரமக்குடியில் தங்குகிறார். நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
ராமேசுவரம் பஸ்நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜனதா கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா மேடையானது நாடாளுமன்றத்தை போன்று அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் பிற காட்சிகளில் இருந்தும் பல்வேறு இளைஞர்கள் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைய இருக்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.