ராஜஸ்தான் சிகாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் உரையாற்றிய பொழுது ஒரு ரெட் டைரியை பற்றி தெரிவித்தார். இந்த பேச்சை எடுத்தாலே காங்கிரஸ் தரப்பினர் அலறி அடித்து ஓடுவதாகவும் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களில் உள்ள நிலையில், ராஜஸ்தானின் சட்டசபையில் திடீரென்று நுழைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர சிங் குதா ஒரு ரெட் டைரியை காண்பித்து இந்த டைரி வெளிவந்தால் முதல்வர் அசோக் கெலாட்டின் உண்மை நிலை வெளிவரும் என்று கூறினார் உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை வெளியேற்றினர்.
சில காங்கிரஸ் தரப்பினர் அவரிடம் சண்டையிட்டு அந்த டைரியின் சில பக்கங்களை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த டைரியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று விசாரித்த பொழுது, முதல்வருக்கு மிகவும் நெருக்கமான ஒருவரான ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவர் தர்மேந்திர ரத்தோருக்கு இந்த ரெட் டைரி சொந்தமானதாகவும், அதில் தற்போது ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் முதல்வரான அசோக் கெலாட் கடந்த 2020 ஆம் ஆண்டு சச்சின் பயிலட் தலைமையில் சில எம்எல்ஏக்கள் செய்த கிளர்ச்சியிலிருந்து அரசை காப்பாற்றுவதற்காக பணம் கொடுத்த தகவலும், கடந்த முறை நடத்தப்பட்ட மாநிலங்களவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறும் நிலையிலிருந்து உள்ளதாகவும் ஆனால் காங்கிரஸ் தனது வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக கொடுத்த பணம் பற்றிய விவரம் என காங்கிரஸ் அரசுக்கு எதிரான பல தகவல்கள் அதில் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால்தான் ரெட் டைரி என்ற வார்த்தையை எடுத்தவுடன் காங்கிரசினர் பதறுவதாகவும் ராஜஸ்தான் மக்களிடையே பேசப்படுகிறது. இதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இந்த டைரி பற்றிய தகவலை சட்டசபை முன்பு தெரிவித்த ராஜேந்திர சிங் குதா முதல்வருக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் தற்போது பெண்கள் பற்றிய கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கியதால் ராஜஸ்தான் அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரின் வீடுகளில் சோதனை செய்த பொழுது ஒரு டைரி சிக்கியதாகவும், அதில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த தான் செந்தில் பாலாஜியையும் அவரது சகோதரரையும் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை போராடி வருவதாகவும், அந்த டைரியில் உள்ள விவரங்கள் வெளியில் வந்தால் ராஜஸ்தானில் தற்போது வெடித்த சர்ச்சையை போன்று தமிழகத்திலும் வெடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது ராஜஸ்தானில் தற்போது ஆளும் அரசாக உள்ள காங்கிரஸ் அரசின் ஊழல் பற்றியும் அம்மாநில முதல்வராக இருக்கின்ற அசோக் கெலாட் செய்த முறைகேடுகள் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளதாலே அந்த ரெட் டைரியின் விபரங்கள் வெளியே வந்து காங்கிரசுக்கு பெரும் பின்னடைவான சூழ்நிலைகள் நிலவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு டைரி அமலாக்க துறையின் கையில் சிக்கி உள்ளது இதில் தமிழகத்தில் தற்போது ஆளும்அரசு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்ற விவரங்களும் குறிப்பிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பலவாறு பேசப்படுகிறது. அதோடு ஆளும் கட்சி தரப்பில் உள்ள முக்கிய புள்ளிகளின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் ராஜஸ்தானில் எப்படி ஒரு டைரி அரசியலை கலைக்கி வருகிறதோ அதேபோன்று தமிழகத்திலும் தற்போது சிக்கி உள்ள டைரி அரசியலின் போக்கையே மாற்றும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டு வருகிறது.