புலன் விசாரணை தொடங்கும் முன்பே, சில தகவல்களை அண்ணாமலை வெளியிட்டது எப்படி? உயிரிழந்த நபர்கள் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு முன் கூட்டியே எப்படி தெரியும்? அதனால் என்.ஐ.ஏ அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும் என இன்றைய முரசொலியில் மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, உள்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மவுனமாக இருக்கும்போது செந்தில் பாலாஜி ஏன் தேவையில்லாமல் நுழைந்து அரசியல் செய்கிறார். அவருக்கு என்ன உரிமை இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’மே, 31, 1991 தேதியிட்ட முரசொலியை பாருங்கள். 'ராஜிவ் காந்தி கொலையாளி சிவராசன் படத்தை தமிழக காவல் துறை கத்தரித்து வெளியிட்டதாக செய்தி குறிப்பிட்டதோடு முரசொலி வெளியிட்ட செய்திகள் துப்பு துலக்க எந்த அளவு பயன்படுகிறது என்பதை பொதுமக்களும், நடுநிலையாளர்களும் உனர்வார்கள் என எண்ணுகிறோம்' என்று ஒரு பக்கத்து முரசொலி செய்தியின் படி, புலன் விசாரணை தொடங்கும் முன்பே, சில தகவல்களை முரசொலி வெளியிட்டது எப்படி? நான்காவது நபர் குறித்த தகவல்கள் முரசொலிக்கு முன் கூட்டியே எப்படி தெரியும்? ராஜிவ் கொலையாளி சிவராசனை முரசொலிக்கு முன்பே எப்படி தெரியும்? என்ற கேள்விகளுக்கு முரசொலி பதில் சொல்ல வேண்டும்.
முரசொலி செய்தியால் மேலும் துப்பு துலக்க முடியும் என்று குறிப்பிட்ட முரசொலிக்கு ஒரு செய்தி. 'சிலிண்டர் வெடிப்பு' என்று சித்தரிக்கபட்டு கொண்டிருந்த கோவை சம்பவம் அண்ணாமலையின் செய்தியால் தான் பயங்கரவாத சதி என்ற துப்பே துலங்கியது. என் ஐ ஏ விசாரிக்க வேண்டியது அண்ணாமலையை அல்ல. தமிழக உளவுத்துறையின் தோல்வியைத் தான் என்பதை செந்தில் பாலாஜி தெரிந்து கொள்ள வேண்டும்’’ என பதிலடி கொடுத்துள்ளார் நாராயணன் திருப்பதி.