பிஹார் : சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பொதுமேடையில் இளம்பெண்ணுடன் குத்தாட்டம் போட்டு பிளையிங் கிஸ் கொடுத்தது தற்போது பிஹார் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அவர் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு விமர்சித்து வருகின்றன.
பிஹார் மாநிலம் பாகல்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோபால் மண்டல். இவர் பிஹார் முதலமைச்சரின் கட்சியான JDU சார்பில் போட்டியிட்டு பாகல்பூரில் அமோக வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாகல்பூர் மாவட்டம் பதேபூர் கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க கோபால் மண்டல் அழைக்கப்பட்டிருந்தார்.
மேடையில் எம்.எல்.ஏ கோபால் மண்டல் மற்றும் அவரது சகாக்கள் இருவர் அமர்ந்திருந்தனர். அப்போது திருமண நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒலிபரப்பப்பட்ட குத்தாட்ட பாடலுக்கு ஒரு இளம்பெண் நடனக்கலைஞர் நடனம் ஆடினார். மேடையிலிருந்து இதைக்கண்ட சட்டமன்ற உறுப்பினர் மண்டல் கீழே இறங்கிவந்து அந்த பெண்ணுடன் நடனமாட தொடங்கினார்.
குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ ஒருகட்டத்தில் தனது பைஜாமாவை தூக்கி காண்பித்தார். மேலும் தனது பையிலிருந்த பணத்தை கூட்டத்தை நோக்கி வீசியதுடன் பிளையிங் கிஸ் கொடுத்து அந்த பெண் நடனக்கலைஞர் கையை பிடித்து நடனமாடினார். இவரது இந்த செயல் வீடியோவாக பதியப்பட்டு மாநிலம் முழுவதும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆளும்கட்சி தலைமை கோபால் மண்டலை கண்டித்ததுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் " கடந்த காலங்களில் இருந்தே நான் இப்படித்தான் என்பது முதலமைச்சருக்கு தெரியும். எங்கு இசையை கேட்டாலும் எனது கால்கள் நடனமாட தொடங்கிவிடும். நான் இசையின் ரசிகன். நடனத்தின் மீது ஆர்வமுள்ளவன்"என தெரிவித்தார்.
இருந்தபோதிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த செயலுக்கு கோபால் மன்னிப்பு கேட்கவேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர். இதற்கு ஆளும்கட்சியினர் காங்கிரஸ் தலைவர் ராகுலும் இளம்பெண்களுடன் நடனமாடியிருக்கிறார் அவரை முதலில் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.