புதுதில்லி : இரண்டாம் உலகப்போர் காலகட்டமான 1939-1945 களில் ஐரோப்பிய வான்வெளியை லுபிட்வாப் என்ற ஜெர்மன் விமானப்படை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஜெர்மனின் போர்விமானங்கள் மற்றும் கடற்படை விமானங்கள் வடிவமைப்பு மேம்பாட்டின் அப்போதைய தலைவராக இருந்தவர் கார்ட்டேங்க். இவர் ஒரு ஏரோநாட்டிக்கல் என்ஜினியர் மட்டுமல்லாது டெஸ்ட் பைலட்டாகவும் இருந்தார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மற்றநாடுகளுக்கு போர்விமானங்கள் தயாரித்து கொடுப்பதில் தீவிரமாக இறங்கினார். 1950ல் கார்ட் டேங்க் இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அவரின் அயராத பங்கில் உருவான முதல் போர்விமானம் HAL HF-24 MARUT. இதுவே முதல் மேக் இன் இந்தியா போர்விமானம்.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முட்டிகள் மற்றும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட போர்விமானம் எல்.சி.ஏ தேஜாஸ் என பலரால் கூறப்பட்டாலும் முதல் போர்விமானம் HAL HF-24 MARUTஎன்பதே உண்மை. இந்தியாவில் மட்டுமல்லாமல் HAL HF-24 MARUT சோதனைகளை வெற்றிகரமாக முடித்த முதல் ஆசிய ஜெட் போர்விமானமாகவும் தோராயமாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுறுசுறுப்பாக இயங்கி செவ்வனே பணியை செய்தது இந்த மருட்.
HAL HF-24 MARUTபோர்விமானம் 1961 ஜூன் 17 அன்று தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் தயாரிப்பான இந்த மருட் ஏப்ரல் மாதம் 1 ம் தேதி 1967ல் இந்திய விமானப்படைக்கு அதிகாரபூர்வமாக அர்ப்பணிக்கப்பட்டது. 20 வருடமாக உற்பத்தியில் இருந்த இந்த மருட் வகை போர்விமானம் இதுவரை 147 எண்ணங்கள் உருவாக்கப்பட்டது.
இந்திய விமானப்படை ஆரம்பகாலத்தில் ஜெட் விமானங்களை இடைமறித்து நிறுத்தவே இந்த மரூட்டை பயன்படுத்தியது. இருந்தாலும் இந்த மருட் இந்திய விமானப்படைக்காக பல தரைத்தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மரூட் ஒரு சூப்பர் சோனிக் திறன்கொண்ட போர்விமானம் என கூறினாலும் மாக் 1 ரக போர்விமானத்தின் மணிக்கு 1234 கிலோமீட்டர் வேகத்தை கடக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
15.87 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானத்தின் உயரம் 11 அடி 10 அங்குலமாகும். அகலம் 29அடி 6 அங்குலமாகும். இந்த போர்விமானத்தின் காலி எடை 13,658 பவுண்டுகள்(6,195). அதேபோல இந்த போர்விமானத்தின் அதிகபட்ச வேகம் கடல்மட்டத்தில் மணிக்கு 1,112 கிலோமீட்டராகும். மேக் இன் இந்தியா என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 1980களின் பிற்பகுதியில் இந்த மருட் படிப்படியாக அகற்றப்பட்டது. இருந்தாலும் தற்போதுவரை விமானப்படை அதிகாரிகளால் HAL HF-24 MARUT கொண்டாடப்பட்டு வருகிறது.