
பீஹாரில் பா.ஜ. கூட்டணி பெற்றிருக்கும் அதிரடி வெற்றி, அங்குள்ள அரசியலையே மாற்றிவிட்டதோடு, தமிழக அரசியல் கட்சிகளின் கணக்கையும் மாற்றியமைத்துள்ளது . 243 தொகுதிகள் கொண்ட பீஹார் சட்டசபையில், பா.ஜ. தலைமையிலான கூட்டணி 200-க்கு மேல் இடங்களில் வரலாறு காணாத வெற்றி பெற்று, இண்டி கூட்டணியை அதலபாதாளத்திற்கு தள்ளிவிட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் நான்கு மாதங்களில் சட்டசபைத் தேர்தல். கடந்த 2021-ல் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை மிகப்பெரிய ஆசையுடன் 60 க்கும் மேற்பட்ட இடங்கள் வேண்டும் என்று தங்கள் உயர்மட்டப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் வாயிலாக தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தது. “2011-ல் 63 போட்டோம், 2016-ல் 41 போட்டோம்… இந்த தடவை அதைவிட குறையக்கூடாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் வலியுறுத்திக் கொண்டிருந்தனர். இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் காங்கிரஸ் நடிகர் விஜயின் த.வெ.க. கட்சியுடனும் உறவு காட்டியது. தி.மு.க. விஜயை திறந்தவெளியில் கடுமையாக விமர்சித்தாலும், காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட விஜயுக்கு எதிராக பேசாமல் அமைதியாக இருந்து வருகிறது. இது எல்லாம் தி.மு.க.-க்கு ஒரு சைகை — “தொகுதி தரலேன்னா நாம விஜய் பக்கம் போயிருவோம்” என்ற மறைமுகச் செய்தியே.
ஆனால் பீஹார் முடிவுதான் அந்தக் கணக்கை முழுக்க தகர்த்துவிட்டது. கூட்டணியின் பலத்தில்கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை என்ற நிலை வெளிப்படையாகி விட்டது. ஒரே மாநிலத்தில் 61 இடங்கள் வாங்கி 5 இடங்களில் தான் வென்ற கட்சி, தமிழ்நாட்டில் 60க்கும் மேல் இடம் கேட்டால் அது எப்படிநியாயம் என்ற கேள்வி தமிழக காங்கிரஸை இப்போது திணறச் செய்துள்ளது உண்மையில், கடந்த முறை கிடைத்த 25 இடங்களுக்கே மேல் கேட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இல்லாமல், பீஹாரில் காங்கிரஸ் பெற்ற தோல்வியை காரணமாகக் காட்டி, தி.மு.க. 25 இடங்களிலிருந்தும் குறைத்துவிடுவார்கள் என்று தமிழக காங்கிரஸ் பெரும் கலக்கம் உள்ளது
அதேபோல், இந்த முறை கூடுதலாக தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த வி.சி., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதே பயத்தில் உள்ளன. “பீஹார் நிலையை வைத்து தி.மு.க. நம்மளோட தொகுதியும் குறைச்சுடுவாங்களோ?” என்ற அச்சம் அந்தக் கட்சிகளின் மனநிலையிலும் தெளிவாக தெரிகிறது.
இதோடு மட்டுமில்லை. பீஹாரில் பா.ஜ.க தோல்வியை தழுவிவிடும் என்ற நம்பிக்கை தி.மு.க. ஆசையாக பார்த்து கொண்டிருந்தது. பா.ஜ. பலவீனமடைந்திருந்தால், மத்தியத்தில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரி துறை போன்றவை தமிழகத்தை நோக்கிய கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்க்கும் என்ற கணக்குதான் இருந்தது. ஆனால் பா.ஜ.க பெற்றிருக்கும் இந்த வரலாற்று வெற்றி,திமுகவின் அஸ்திவாரத்தை முற்றிலும் உடைத்துவிட்டது. காரணம், மத்திய அரசு இன்னமும் பலப்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது இருப்பதாகக் கூறப்படும் பல ஊழல் வழக்குகள் மீண்டும் உயிர்ப்பெடுக்கலாம். சோதனை, வழக்குப்பதிவு, விசாரணை, கைது அனைத்தும் அதிகரிக்கும் என்ற அச்சம் தி.மு.க. தரப்பில் உள்ளது.மேலும் தமிழக தேர்தல் முடியும் வரை தமிழ்கத்தில் தனி டீமை இறக்க உள்ளது மத்திய அரசு. இது என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையுடன் இணைந்து செயல்படும் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
