24 special

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி பரபரப்பு அறிக்கை..! காவல்துறை அதிகாரி கைது..!


புதுதில்லி : 2002ல் நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தரப்பில் பிரதமர் மோடி உட்பட 63 பேர் மீது  ஜோடிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததோடு அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் இத்தகைய செயல்களில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


அதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் என்ற போர்வையில் செயல்பட்டுவந்த ஒரு மூதாட்டி நேற்று அதிரடியாக கைதுசெய்யப்பட்டார். மேலும் குஜராத் கலவர வழக்கில் பொய்யான தகவல்களை அளித்த ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.பி ஸ்ரீகுமார் கைதுசெய்யப்பட்டார். இந்த அதிகாரியின் கைதை முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி வரவேற்பை தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்துவந்த நம்பி நாராயணன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உளவுபார்த்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டார். அந்த வழக்கை அதிகாரி ஸ்ரீகுமார் விசாரணை நடத்திவந்தார். ஆனால் நம்பி நாராயணன் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு அவரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நம்பி நாராயணன் " ஜோடிக்கப்பட்ட கதைகள் மூலம் குஜராத் கலவர வழக்கை பரபரப்பாக்க முயன்றதாக ஸ்ரீகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர்மீது குற்றசாட்டு இருப்பதை நான் அறிந்தேன். என் விஷயத்திலும் அவர் இப்படித்தான் செயல்பட்டார். நமது அமைப்பானது எந்த ஒரு அறிக்கையும் கொடுத்துவிட்டு தப்பிக்கும் விதத்தில் உள்ளது.

ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனது அதிகாரத்தின் மாண்பையும் அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளார்" என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் குறிப்பிட்டுள்ளார். மேலும் குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை அளித்த முன்னாள் ஐபிஸ் அதிகாரிகள் சஞ்சீவ் பட், டீஸ்டா செடல்வாட் மற்றும் ஆர்பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.