புதுதில்லி : குறிப்பிட்ட மதப்பிரிவினரின் தெய்வமாக கருதப்படுபவரை குறித்து கருத்து கூறியதாக பிஜேபி முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதியப்பட்டது. மேலும் அவரை கொன்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என வகுப்புவாதிகள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் உச்சநீதிமன்றமும் நுபுர்ஷர்மாவுக்கு தளர்வான நாக்கு என்றும் அவர் மன்னிப்பு கோரவேண்டும் என கூறியதோடு நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் அவரே காரணம் என கூறியிருந்ததுடன் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை நிலுவையில் வைத்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் " இந்திய நாட்டின் சமூக நல்லிணக்கத்தை குலைத்ததற்காக நுபுர் ஷர்மா தண்டிக்கப்படவேண்டும். அவரது முகம் மட்டுமல்ல அவரது உடலும் மன்னிப்பு கேட்கவேண்டும்" என தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
NCW என அழைக்கப்படும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா உத்திரபிரதேச காவல்துறை இயக்குனரான டிஎஸ் சவுகானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் " இது அப்பட்டமான தூண்டுதல். அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக வெறுப்பு மற்றும் தவறான எண்ணங்களை தூண்டியுள்ளார்.இது இருமதக்குழுக்களிடையே வகுப்புவாதத்தை தூண்டி நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். இந்த விஷயத்தின் தீவிரத்தை கருத்தில்கொண்டு அகிலேஷ் யாதவ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நுபுர் ஷர்மா விவகாரம் ஏற்கனவே நீதித்துறையால் ஆராயப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அகிலேஷின் அறிக்கைகள் தேவையற்றது. நுபுர் ஷர்மாவின் உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் நிலவி வரும்வேளையில் அகிலேஷின் இந்த கருத்து பொதுமக்களை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்" என ரேகா சர்மா அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சமாஜ்வாடி தலைவரான அகிலேஷ் சில நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமானால் அகிலேஷுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.