
கடந்த திமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருந்தாலும், மாநில அரசின் காவல்துறை அது சம்பந்தமாக எந்தவொரு எஃப்.ஐ.ஆரும் (FIR) பதிவு செய்யாமல் அப்படியே மறைத்து வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே, மத்திய அமலாக்கத் துறையால்கூட அடுத்தகட்ட விசாரணையை முன்னெடுக்க முடியாமல், குற்றம் சாட்டப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பொதுவாக, அரசியலில் ஒரு அதிகாரி ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறார் என்று சர்ச்சை வந்தால், புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் அவரைப் போன்றவர்களைப் பவர் இல்லாத, சும்மா பெயருக்கு இருக்கிற ஒரு டம்மி பதவிக்குத்தான் தூக்கி அடிக்க வேண்டும். உதாரணமாக, 'மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரி' என்பது போன்ற முக்கியத்துவம் இல்லாத ஏதோ ஒரு பதவிக்கு அவரை மாற்றியிருக்க வேண்டும். அப்படி மாற்றியிருந்தால், மக்கள் "பரவாயில்லை, புதிய ஆட்சி நல்ல ஆட்சியாக நடக்கப் போகிறது; தவறு செய்த அதிகாரிகளைச் சரியாக ஓரங்கட்டுகிறார்கள்" என்று மனதாரப் பாராட்டியிருப்பார்கள்.
ஆனால், புதிய அரசு அப்படிச் செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக, திமுக அமைச்சர்களோடு மிகவும் நெருக்கமாக வேலை செய்த, அரசியல் காரணங்களுக்காக 50-க்கும் மேற்பட்ட போலி குண்டர் வழக்குகளைப் போட்டு, நீதிமன்றத்திடமே "போலீஸ் அரசியல்வாதிகளின் கைப்பாவையாகச் செயல்படுகிறது" என்று கொட்டு வாங்கும் அளவுக்கு ஒட்டுமொத்தக் காவல் துறையையும் கலங்கப்படுத்திய அதிகாரியை, இன்னும் பவர்ஃபுல்லான லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தலைவராகக் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறது. என விமர்சனங்கள் எழுந்துள்ளது
ஏற்கனவே முறையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல், பல ஊழல் விவகாரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பொருளைப் போல உறைந்து போய்க் கிடக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், பழைய ஆளுங்கட்சியுடன் இவ்வளவு நெருக்கமாக இருந்த அருண் அவர்களுக்கு காவல் துறை முக்கியப் பொறுப்பைத் தூக்கிக் கொடுத்திருப்பது, மிகச்சரியாகச் சொன்னால் “சுட்ட கருவாட்டுக்கு பூனையை காவல் வைத்தது போல” இருக்கிறது. "இவர் ஊழலை விசாரிக்கப் போகிறவரா, இல்லை பழைய ஃபைல்களை தூசி தட்டி அலமாரியில் மீண்டும் பூட்டப் போகிறவரா?" என்ற பெரிய சந்தேகம் இப்போது பொதுமக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது.
எனவே, காலம் தாழ்த்தாமல் உடனடியாக இவர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதவியிலிருந்து மாற்றப்பட்டு, வேறு ஏதாவது ஒரு டம்மி பதவிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டும்தான், மக்கள் விஜய் அவர்களை நம்பி வாக்களித்ததற்கு ஏதோ ஒரு பலன் கிடைத்தது என்ற நிம்மதியான உணர்வும் நம்பிக்கையும் அவர்களுக்குள் பிறக்கும். இல்லையென்றால், "தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வரும்" என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு, "இங்கு மாறியது வெறும் பெயர்ப் பலகை மட்டும்தானா?" என்ற ஏமாற்றக் கேள்வி இன்னும் சத்தமாக ஓங்கி ஒலிக்கும். என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.
