24 special

இனி தமிழகம் தான் கனிமொழியின் அதிரடி! கலக்கத்தில் உதயநிதி! திமுக-வுக்கு செக் வைத்த 3 காரணங்கள்! மொத்தமாக மாறிய களம்

UDHAYANIDHISTALIN,KANIMOZHI
UDHAYANIDHISTALIN,KANIMOZHI

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக-வுக்கு இப்போதே பின்னடைவுகள் ஆரம்பமாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. பல்வேறு ஊடகங்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வெளியிடும் கருத்துக்கணிப்புகள் திமுக-வுக்கு எதிரான அலையைத் தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக, "அசைக்க முடியாத செல்வாக்கு" என்ற பிம்பம் உடைந்து, வரும் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்திக்கும் என்ற ரீதியிலான தகவல்கள் அறிவாலயத்தை உறைய வைத்துள்ளன. வேட்பாளர் நேர்காணல் ஒருபுறம் நடந்தாலும், ஸ்டாலின் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் ரகசியப் பட்டியலால் மண்டலப் பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.


இந்த உட்கட்சிப் பூசல்களுக்கு நடுவே, திமுக-வின் வாரிசு அரசியலில் எழுந்துள்ள புதிய பிளவு கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை டெல்லி அரசியலில் கவனம் செலுத்தி வந்த கனிமொழி, தற்போது மாநில அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதும், அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சுகளும் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. கனிமொழியின் இந்த அதிரடி வருகை, முதல்வர் குடும்பத்திற்குள்ளேயே ஒரு பனிப்போரை உருவாக்கியிருப்பதாகவும், இது கட்சி நிர்வாகிகளை இரு பிரிவாகப் பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கட்சியின் செல்வாக்கு சரிவதற்கு மற்றொரு முக்கியக் காரணம், அமைச்சர்கள் மீதான அடுக்கடுக்கான ஊழல் புகார்கள். கடந்த சில காலங்களாகவே திமுக அமைச்சர்கள் மீதான சொத்துப் பட்டியல் மற்றும் 10 சதவீத கமிஷன் விவகாரங்கள் பொதுவெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மணல் குவாரி முறைகேடுகள், குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையில் நிலவும் டெண்டர் குளறுபடிகள் போன்றவை அமலாக்கத்துறை வரை சென்றுள்ளன. மூத்த அமைச்சர்கள் பலர் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை வளையத்தை இறுக்கி வருவது, தேர்தலுக்கு முன் கட்சிக்குத் தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊழல் புகார்கள், வாரிசுப் போட்டி மற்றும் சீனியர் தலைவர்களின் அதிருப்தி என அனைத்தும் ஒன்றிணைந்து திமுக-வை ஒரு இக்கட்டான சூழலில் நிறுத்தியுள்ளன. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும்போது ஏற்படும் இயல்பான எதிர்ப்பு அலை (Anti-incumbency), தற்போது ஊழல் பட்டியல்களால் மேலும் வலுவடைந்துள்ளது. அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் வாங்க மல்லுக்கட்டுவதும், மறுபுறம் குடும்பத்திற்குள் அதிகாரப் போட்டி நிலவுவதும் தொண்டர்களைச் சோர்வடையச் செய்துள்ளது. இத்தகைய சூழலில், வரும் தேர்தலில் திமுக ஒரு பெரும் சரிவைச் சந்திப்பது தவிர்க்க முடியாதது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.