24 special

கவுதமி விலகல் வேதனை தருகிறது....அரசுக்குக் கேள்வி எழுப்பிய வா.சீனிவாசன்!

vanathi srinivasan, gowthami
vanathi srinivasan, gowthami

பாஜகவை சேர்ந்த அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டிய நடிகை கவுதமி இன்று பாஜகவில் இருந்து விலகினார். இவர் விலகியது பாஜகவினரிடையே அதிர்ச்சி ஆக்கிய நிலையில், பாஜகவில் இருந்து கவுதமி விலகியது வருத்தமளிக்கிறது பாஜக எம்எல்ஏவானதி சீனிவாசன் கூறியுள்ளார்.ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்புதூரில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் பாஜக சார்பில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்பின்னர், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை கவுதமி மிகுந்த மனவேதனையுடன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "எனக்கு கவுதமி மீது அதீதமான அன்பு, பாசம், மரியாதை உண்டு.


பாஜகவில் கடந்த ஒருசில ஆண்டுகளாக தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி அவர்.அவர் எந்தளவுக்கு கட்சிக்காக கடுமையாக உழைத்தார் என்பது எனக்கும் தெரியும். அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கடிதத்தைப் பார்க்கும்போது எனக்கு கடுமையான மனவேதனை ஏற்படுகிறது. பாஜக மகளிரணியில் இணைந்து பணியாற்றுவதற்காகக் கூட கவுதமியிடம் நான் ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தேன். தேசிய அளவில் என்னுடன் இணைந்து பணியாற்ற அழைத்தபோது, இல்லை மாநிலத்தில் நான் பணியாற்றுவதாக கவுதமி கூறிவிட்டார்.

தற்போது, எனக்கு மாநில அளவிலான பணிகளில் எனது வேலை குறைந்துவிட்டதாலும், அதிகமாக கவுதமியை பார்ப்பதற்கோ, பழகுவதற்வோ, பேசுவதற்கோ நேரம் இல்லாமல் இருந்தது. ஆனாலும், கடந்த மாதம்கூட அவருடன் பேசினேன். என்னுடைய தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் கவுதமி.தான் ஒரு சினிமா ஸ்டார். தனக்கு எப்போதும் முன்னுரிமை தரவேண்டும் என்று கவுதமி ஒருபோதும் யோசித்ததே இல்லை. அந்தளவுக்கு கட்சியின் அடிப்படை தொண்டர் போல பணியாற்றக்கூடியவர். அவரது ராஜினாமா கடிதம் எனக்குமே மனவேதனையை கொடுத்துள்ளது. கவுதமி எதிலும் சோர்ந்துபோகும் நபர் இல்லை.

அனைத்து காரியங்களையும் தைரியமாக எடுத்து செய்யக்கூடியவர். தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட பெண்ணும்கூட கவுதமி.கடந்த 10 நாட்களுக்கு முன்பாகக்கூட, ஒரு வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். முழுமையான தகவல்களைக் கொடுக்குமாறு நானும் பதில் அளித்திருந்தேன். ஆனால், அவருடைய அறிக்கையைப் பார்த்த உடன் எனக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கிறது. நிச்சயமாக கட்சிக்காரர்கள், சட்டத்துக்குப் புறம்பாக யாரையும் பாதுகாக்கப் போறது இல்லை. கவுதமி இன்னமும்கூட மாநிலத் தலைவரிடமோ, என்னிடமோ அந்தப் பிரச்சினை குறித்து முழுமையாகக் கூறவில்லை.

அதேநேரம், ஒரு மாநில அரசு புகார் கொடுத்து இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. கவுதமி பாஜகவில் இருப்பதால், நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களா? ஏன் இத்தனை நாட்களாக அவருடைய புகாரைப் பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு, புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து வெளியே வந்தால்தான் புகார் பதிவு செய்வேன் என்று நெருக்கடி கொடுத்தார்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே, இந்த விசயத்தைப் பொறுத்தவரை, மகளிரணி தலைவராக எனக்கும் ஒரு மனவேதனையை கொடுத்திருக்கிறது" என்று அவர் கூறினார்.