தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை எம்.பி, எம்எல்ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ. 8 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது.11 ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட செம்மண் குவாரி வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம், சென்னை உள்ளிட்ட வீடுகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. துணை ராணுவப் படை பாதுகாப்புடன் இந்த சோதனைகள் நடைபெற்றது.
கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.,யுமான கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்டோர் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் லோகநாதன் மட்டும் இறந்து விட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோதபணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் திமுக எம்.பி கவுதமசிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்
இந்நிலையில் இந்த வழக்கில் திமுக எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்குஎதிராக அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.
இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.கவுதம சிகாமணி தற்போது எம்.பி.யாக பதவி வகிப்பதால், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள நீதிபதி, வழக்கை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கவுதம சிகாமணி எம்பி முதலீடு செய்திருந்தார். ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாட்டில் முதலீடு செய்து கவுதம சிகாமணி எம்பி வருவாய் ஈட்டினார் என்பதுஅமலாக்கத்துறை வழக்கு. இந்த வருவாயில் ரூ7 கோடியை கணக்கில் காட்டாமல் மறைத்தார் கவுதம சிகாமணி எம்பி என்பதும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இதனடிப்படையில் அவருக்கு சொந்தமான அசையா சொத்துகள், வணிக வளாகங்கள், வங்கி கணக்கு பணம் உட்பட ரூ8 கோடியே 60 லட்சம் மதிப்பிலான சொத்துகளை 3 ஆண்டுகளுக்கு முன் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்திருந்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.