24 special

மீண்டும் சர்ச்சைக்கு உள்ளான செந்தில் பாலாஜி வழக்கு....!

highcourt, senthil balaji
highcourt, senthil balaji

குற்றப்பத்திரிகை நகல், வழக்கு ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியிருப்பதன் மூலம், மீண்டும் செந்தில் பாலாஜி குறித்தான பரபரப்பு அதிகரித்துள்ளது.மாவட்ட அமர்வு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று வழக்கு ஒரு பக்கம் சென்று கொண்டிருந்த நேரத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கடந்த 7-ம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 12-ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாள்கள் விசாரணை நடத்தினர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 28-ஆம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதனிடையே செந்தில் பாலாஜி மீது 120 பக்க குற்றப்பத்திரிகை, மூன்றாயிரம் பக்க வழக்கு ஆவணங்களை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. இதனையடுத்து குற்றப்பத்திரிகை நகல், வழக்கு ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியிருப்பதன் மூலம், மீண்டும் செந்தில் பாலாஜி குறித்தான விவாதம் அதிகரித்துள்ளது.

வெளியாகியுள்ள குற்றப்பத்திரிகை தகவலின்படி, ‘செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் (செந்தில் பாலாஜி) பணமோசடி குற்றத்தை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலே விவரிக்கப்பட்ட செயல்பாட்டின் மூலம், மக்கள் பணியாளராக இருந்த செந்தில் பாலாஜி, அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஊழல் மற்றும் சட்டவிரோதமான வழிகளில் பணப் பலன்களைப் பெற்று, செய்த குற்றத்தின் காரணமாக நேரடியாக வருமானத்தை பெற்றுள்ளார். திட்டமிடப்பட்ட இந்த குற்றத்தால், சிலவற்றை அவர் தனது/ தனது குடும்பத்தினரின்/ தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து மோசடி செய்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவலில், அதற்கான ஆதாரங்களும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ‘ஆள் சேர்ப்பு, எவ்வளவு பணம் வசூல் ஆகி உள்ளது, பணம் தராதவர்கள் குறித்து செந்தில் பாலாஜி, அவரது உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன், போக்குவரத்து அதிகாரிகளிடையே நடந்த இ - மெயில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தத் தகவல் தொடர்புகளில் எக்செல் ஷீட்கள் உள்ளன. அவை வேட்பாளர்களின் ஆட்சேர்ப்பின் நிலையை ‘பெறப்பட்டதா, இல்லையா’ என்பதன் அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிடுகின்றன; அதில், பணம் கொடுத்த நபருக்கு இன்னும் ஏன் பணி ஆணை வழங்கப்படவில்லை? யார் யாருக்கு பணி ஆணை அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் கொடுத்த தொகை விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

சில சந்தேக நபர்கள், செந்தில் பாலாஜிக்கும், அரசு வேலை கேட்டவர்களுக்கும் இடைத்தரர்களாக இருந்து உள்ளனர். இவர்கள் பணம் வசூல் செய்து, அமைச்சரின் உதவியாளர் சண்முகத்தின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர். சண்முகம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வாயிலாக, அமைச்சரிடம் தரப்பட்ட தொகை குறித்த ஆவணங்களும் சிக்கி உள்ளன. சில சந்தேக நபர்களின் மீது பி.எம்.எல்.ஏ சட்டப்பிரிவு 50 -ன் படி ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜியின் வங்கிக்கணக்கில், ரொக்க வைப்புத் தொகை மொத்தம் 2013-14 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை ரூ.1.34 கோடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், அவரது மனைவி மேகலா, 2014-15 நிதியாண்டு முதல் 2019-20 நிதியாண்டு வரை ரூ.29.55 லட்சம் ரொக்க வைப்புத் தொகையைப் பெற்றுள்ளார்’ என்று விளக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் உதவியாளர்களிடம் பணம் கொடுத்தவர்கள். அவர்கள் நேர்காணல் முடிந்த பின், சண்முகம் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை நேரில் சந்தித்துள்ளனர். பணி நியமன ஆணை வழங்க எவ்வித இட ஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கு, நேர்காணல் மதிப்பெண்ணை மாற்றி, தரவரிசை பட்டியலில் முன்னிலைப்படுத்தி பணி ஆணை வழங்கி உள்ளனர். செந்தில் பாலாஜியின் சார்பில் போக்குவரத்து துறைக்கு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற  தெர்தல் நெருங்கி வருவதால் , தேர்தல் சமயத்தில் நாடு முழுவதும் தேர்தல் ஜுரம் அதிகமாக இருக்கும் என்றும், ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்தல் வேலைகளில் இருப்பார்கள் என்றும் அந்த சமயத்தில் நாட்டில் உள்ள முக்கிய வழக்குகளின் தீவிரம் குறையும் என்றும் , அப்போது சரியாக காய் நகர்த்தினால் பெயிலில் வந்துவிடலாம் என்றும் கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி என்று நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கிறது. முக்கியமாக 2024 யில் ஆட்சி மாற்றம் நிகழும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் ,பிறகு வழக்கை பார்த்துக்கொள்ளலாம் என்றும் செந்தில் பாலாஜி தரப்பினர் திட்டம் வைத்துள்ளார்களாம்.இதற்கிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை விசாரிப்பது யார் என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அவர் மீதான குற்றப்பத்திரிகையில் உள்ள சில விஷயங்கள் கசிந்திருப்பது செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.