சண்டிகர் : கட்சியை பலப்படுத்தவேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறிய அடுத்தநாளே பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது சோனியாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரான சுனில் ஜாகர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சன்னியை விமர்சித்ததற்காக ஜாகருக்கு தலைமை சோகாஸ் நோட்டிஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சோகாஸ் நோட்டிஸ் அனுப்பட்ட சில வாரங்களிலேயே கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
சுனில் ஜாகர் தனது முகநூல் நேரலையில் காங்கிரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். மேலும் குட்பை அண்ட் குட் லக் காங்கிரஸ் என நேரலையில் கூறியுள்ளார். பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் தலைமை உதய்பூரில் கூடியிருக்கும் இந்த நேரத்தில் ஜாகரின் ராஜினாமா சலசலப்பை கிளப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரசின் ஒழுக்க நடவடிக்கை குழு ஜாகரை இரண்டு வருடம் இடைநீக்கம் செய்யுமாறும் அனைத்து பதவிகளில் இருந்து நீக்குமாறும் பரிந்துரைத்திருந்தது. கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.அந்தோணி தலைமையிலான ஐந்துபேர் கொண்ட குழு சுனில் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது.
அந்த கூட்டத்தில் தாரிக் அன்வர் அகர்வால் மற்றும் பரமேஸ்வர் ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் சுனில் ஜாகரின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் அம்பிகா சோனி அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. சுனில் ஜாகர் முன்னாள் முதல்வரை கடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்றதற்கு காரணம் என கூறியதோடு சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு தலைமையை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.