குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022 மீது விவாதம் நடைபெற்றது, கிரிமினல் விவகாரங்களில் அடையாளம் காணுதல் மற்றும் விசாரணை செய்தல் மற்றும் பதிவுகளைப் பாதுகாப்பதற்காக குற்றவாளிகள் மற்றும் பிற நபர்களின் அளவீடுகளை எடுப்பதற்கு அங்கீகாரம் அளிக்க இந்த மசோதா முயல்கிறது. மக்களவையில் ஏப்ரல் 4 திங்கள்கிழமை மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மீது பேசிய அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் முன் எப்போதும் இல்லாத அளவாக முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டி பேசினார், இந்தியாவில் எல்லைக்குள் புகுந்து 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு உதவியை நம் நாட்டில் உள்ள யாரேனும் உதவி செய்யாமல் எப்படி சாத்தியமானது என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் 2008-ம் ஆண்டு தாக்குதலுக்கு பண உதவி செய்தவர்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும் ரவீந்திரநாத் குறிப்பிட்டு பேசினார், இது குறித்து அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு :-
' ''வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள முயற்சிகள், இந்தியாவுக்கு இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க உதவுகின்றன.2005ஆம் ஆண்டில், பேரழிவுக்குப் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்ட விரோத நடவடிக்கைகளுக்குத் தடை) சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, இணைய ஊடகங்களின் செல்வாக்கானது அதிகளவில் இல்லை.
ஆனால், இப்போது, யூ-டியூப் அல்லது டார்க் வெப்-பில் ஓர் இளைஞன் கூட, ஒரு மனம் பேதலித்த பயங்கரவாதி அல்லது எதிரிதேசத்தால் அறிவுறுத்தப்பட்டு, மற்றொரு நாட்டில் உள்ளவரிடம் இருந்து நிதியுதவி பெற்று, தங்கள் வீடுகளில் கூட, டபிள்யூஎம்டி எனப்படும் பேரழிவுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தயாரிக்க முடியும்.
பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிப்பதற்காக, நிதியுதவி செய்யும் கும்பலின் எண்ணிக்கை விரிவடைந்துள்ளது. மேலும், இதுபோன்ற பைத்தியக்காரத்-தனமான பயங்கரவாதம் அல்லது தீவிரவாதத் தாக்குதல்களில் இருந்து நம் நாட்டைப் பாதுகாப்பது அவசியமாகும்.
டபிள்யூஎம்டி-யின் தவறான பயன்பாடானது உலகளாவிய பிரச்சினையாக விளங்குகிறது. பிரதமரின் தலைமையில் இந்தியாவானது, தனது சாதனைகளைப் பற்றி பெருமைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், பிராந்தியச் சூழலில், ''இந்தியாவின் பெருமை'' என்பது துரதிருஷ்டவசமாக ''அண்டை நாடுகளின் பொறாமை'' யாகும்.
2008 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, மும்பையில் மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலை நாம் கண்டோம். இது எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது எங்கள் எல்லைக்குள் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் மும்பை பெருநகரில். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் நடுநிலையாளர் ஆனார்கள் மற்றும் சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
ஆனால், இத்தகைய பயங்கரவாதச் செயலைச் செய்வதற்காக அவர்களுக்கு நிதி அளித்தவர்களின் நிலை என்ன? இந்தியாவில் வசிப்பவர்கள் அல்லது இந்தியர்களின் துணையில்லாமல், அவர்கள் நம் எல்லையைத் தாண்டி வந்தார்கள் என்று கூறுவதை நாம் நம்ப வேண்டுமா?
நம் நாட்டுக்குள்ளும், ஏன் நாடு முழுவதிலும் நன்கு கட்டமைக்கப்பட்ட நிதி வலையமைப்பு செயல்படுகிறது. இந்த பயங்கார நிதியளிப்பு வலையமைப்புகள் நம் நாட்டிலிருந்தும், எல்லைகளைத் தாண்டியும் அழிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மசோதாவை நான் வரவேற்கிறேன்.
பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளை ஆதரிக்கும் பிளாக்செயின் தொழில்நுட்பம் அல்லது ஆன்லைன் கிரவ்டு ஃபண்டிங் இணையதளங்கள் போன்ற, இந்த ஆயுதங்களுக்கு நிதியளிப்பதற்கான புதிய வழிமுறைகளைப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட நாம் தயாராக வேண்டும்.
பிரதமரின் தலைமையின் கீழ் எங்கள் அரசாங்கம் இந்தச் சட்டங்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதை உறுதிசெய்கிறது, இதன் மூலம் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களின் சரியான செயல்பாட்டை நம்மால் உறுதி செய்ய முடியும். ஆயுதப் பெருக்கத்துக்கான சட்ட விரோத நிதியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை ஆதரிக்கும்இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்'' என்றார்.