தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் ரமேஷ் என்பவர் புர்கா விவகாரத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
என்னுடைய ஆரம்ப கால பள்ளி படிப்பு ஒரு இஸ்லாமிய பள்ளியில்தான்.இஸ்லாமிய கான்வெண்ட்.ஐந்தாம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன்.
எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் மொஹம்மத் சையத் ஹாசீம்.அவரும் எங்களுக்கு பாடம் எடுப்பார்.அவரது மனைவி மெஹருன்னிசா அவரும் ஆசிரியை என்பதால் எங்களுக்கு வகுப்பெடுப்பார்.அவர்களது மகள் ஷாஹின் என் வகுப்பில் என்னோடு உடன் படித்தவர்.
இவை தவிர உடன்படித்த நண்பர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள்தான். தலைமை ஆசிரியரின் மனைவியோ மகளோ பள்ளிக்கு வரும்போது பல நேரங்களில் ஹிஜாப் அணிந்து வருவதை கண்டு இருக்கிறேன்.ஆனால் வகுப்பிற்கு உள்ளே வந்த பிறகு ஒருநாளும் அவர்கள் ஹிஜாப் அணிந்து நான் ஒருபோதும் பார்த்ததில்லை.மீண்டும் பள்ளியை விட்டு செல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்வார்கள்.
ஹிஜாப் அணிவது பழமைவாதம் பெண்ணடிமைத்தனம் என்று பெண்ணியவாதிகளோ முற்போக்குவாதிகளோ சொன்ன போதிலும் கூட எனக்கு அந்த கருத்தில் ஒரு போதும் உடன்பாடு இருந்ததில்லை.
அது அவர்களுடைய வழக்கம்.அவர்கள் அப்படியே பழகி விட்டார்கள். ஒருசிலர் வீட்டின் நிர்பந்தத்தால் அணிகிறார்கள் ஆனால் ஒரு சிலர் விரும்பி அணிகிறார்கள் என்பதுதான் என்னுடைய வாதமாகவும் கண்ணோட்டமாகவும் இருந்தது. எனவே ஹிஜாப் அணிவதை அடிமைத்தனமாகவோ பிற்போக்குத்தனமாகவோ நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
ஆனால் இதுநாள் வரை தங்களை முற்போக்குவாதிகள் சீர்திருத்தவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பலர் ஹிஜாப் அணிவதில் இருந்து பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கூக்குரல் விடுத்தவர்கள் இன்று ஹிஜாப் சர்ச்சை வெடித்த உடனேயே அடித்தார்களே ஒரு யு-டர்ன்.
இதுநாள் வரையிலும் ஹிஜாப் அணிவதை பெண்ணுரிமை மீறல் என்று பேசி வந்தவர்கள் இன்று அதுதான் அவர்களின் உரிமை என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்.இவர்களின் நிற மாற்றத்திற்கு முன்னாள் பச்சோந்தி கூட தோற்றுப்போகும்.
இப்படிப்பட்டவர்கள் பெரும் ஆபத்தானவர்கள். இவர்களுக்கென்று நிலையான சிந்தனையோ கொள்கையோ எதுவும் கிடையாது.
சரியோ தவறோ ஹிஜாப் வேண்டும் வேண்டாம் என்று சொல்வற்கு மற்றவர்களுக்கு உரிமை உண்டு.ஆனால் இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
ஏதோ ஒரு பழமொழி சொல்வார்களே.ஏர் ஓட்டும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை? என்று.அதைப் போல.இவர்களின் போலி முகத்திரையை இவர்களே கிழிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
More watch videos