கடந்த சில நாட்களாக வருமானவரித் துறையினரால் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. அப்போது கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரம் இரண்டாவது தெருவில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் மடிக்கணினி மற்றும் பல ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்ணாடி உடைக்கப்பட்டதை தொடர்ந்து வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள இயலாத நிலையில் திரும்பிச் சென்றனர்.
அதுமட்டுமல்லாமல் கரூர் மேயர் கவிதா வருமானவரித் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த சோதனையின் முடிவில் பல்வேறு ரகசிய ஆவணங்களும் கோப்புகளும் வருமான வரி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை திமுக அமைச்சர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனையில் இறங்கினர். சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடைய சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் அவரது நண்பர் கோகுலின் வீடு, மற்றும் கரூர் , ஈரோடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களை அமலாக்கத் துறையினர் சுற்றி வளைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது . தலைமை செயலகத்தில் சோதனை நடைபெற்றதை தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
ஒருவழியாக அமலாக்கத் துறையினரின் சோதனை முடிவுக்கு வந்து விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் சமயத்தில் நெஞ்சு வலி ஏற்படவே அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது மாரடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.
இது மட்டுமல்லாமல் தற்போது மத்திய குற்ற பிரிவு அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சம்மன்அனுப்பியது மேலும் செந்தில்பாலாஜி தரப்பிற்கு பேரிடியை இறங்கியதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் மோசடி செய்துள்ளார் என்ற அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி உட்பட்ட 120 பேரை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கான காரணம், செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியில் இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 1.62 கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் இடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
வரும் 6ம் தேதி தேதி உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குற்ற பிரிவு அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இதனை விசாரிக்குமாறு உத்தரவிட்டத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன! அமலாக்கத்துறை எப்படியாவது செந்தில்பாலாஜியை பாதுகாப்பு வளையத்திற்குள் எடுத்து விசாரிக்க வேண்டும் என துடிக்கும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அமலாக்கத்துறையை முந்திவிட வேண்டும் என நினைக்கின்றனர்! அப்படி அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை விசாரணைக்கு எடுக்கும் முன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில்பாலாஜியை பாதுகாப்பில் விசாரணைக்கு எடுத்தால் வேறு மாநிலத்திற்கு பாதுகாப்பு கருதி கொண்டு செல்லலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன!
அப்படி செந்தில்பாலாஜியை வேறு மாநிலத்திற்கு கொண்டு சென்று விசாரித்தால் அது கண்டிப்பாக திமுகவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.