24 special

நாங்க ஓட்டு போட்டா .. நீங்க கேஸ் போடுறீங்களா? கேள்வி கேட்க தொடங்கிய மக்கள்..! 2024 வரட்டும் இருங்க..!


பைப்லைன் அமைக்காமல் குடிநீர் குழாய் பொறுத்தி உள்ளதாக வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு இந்திரவனம் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தக் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளில் முறையாக பைப் லைன் அமைக்காமல், ஒரு அடி பள்ளம் தோண்டி, அதில் குடிநீர் குழயை ஊன்றி சென்றுவிட்டதாக, இந்திரவனம் கிராமத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் வீடியோ பதிவு வெளியிட்டார்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான நிலையில், இப்போது புயல் வேகத்தில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வீடியோவை வெளியிட்ட இளைஞர் முத்து கிருஷ்ணன் மீது அரசு ஊழியர் ஒருவர் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் இளைஞர் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அதனை வீடியோ பதிவிட்டு சோசியல் மீடியாவில் வைரலாக்கியதாகவும், தவறான நோக்கத்துடன் வீடியோ பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தன்னுடைய கிராமத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது அரசு அலுவலரை வைத்தே புகார் கொடுக்க வைத்துள்ளது, சாமானிய மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை போல் இருப்பதாக சோசியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்துள்ளது. அரசு அதிகாரிகள் அல்லது டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் பணியை முடிக்காவிட்டால் மக்கள் தட்டிக்கேட்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆனால் தவறை தட்டிக்கேட்ட இளைஞரை தண்டிப்பது தான் ‘திராவிட மாடலா?’ என கேள்விகள் எழுந்துள்ளது. 

மேலும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டினால், கேஸ் போடுவீர்கள் என்றால் ... இதற்கு தான் நாங்கள் ஓட்டு போட்டோமா? என தைரியமாக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர் மக்கள். இதன் பிரதிபலிப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும் என விமர்சனம் எழுந்து உள்ளது.

பணிகளை முடிக்காமல், பெயரளவுக்குக் கூட பணிகளை மேற்கொள்ளாமல், அதனை வெளியிட்ட வாலிபர் மீது தவறான முறையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் முத்துகிருஷ்ணன் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும், முறையாக குடிநீர் பைப் லைன் அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- அன்னக்கிளி