
அறுசுவை உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சுவை இனிப்பு அந்த இனிப்பு கொண்ட எந்த உணவுப் பொருளும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அப்படி பிடித்த இனிப்பு பொருட்களில் ஒருவகை இனிப்பு தான் அல்வா! அல்வா என்றாலே பலரது நாக்கில் எச்சில் மிதக்கும் அதை சாப்பிடுவதற்கு எந்த நேரம் காலமும் தேவையில்லை, சூடாக கொடுக்கப்படும் அல்வாவை பார்த்து ஓடி சென்று அனைவரும் வாங்குவார்கள். அப்படி அல்வாவுக்கே மிகவும் ஃபேமஸான திருநெல்வேலி அல்வா என்பது எல்லாராலும் விரும்பி உண்ணப்படுவது. நமக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் உறவினர்கள் என யாரேனும் திருநெல்வேலிக்கு சென்றால் நிச்சயமா எனக்கு அல்வா வாங்கிட்டு வரணும் என்று கூறுவதை மறக்க மாட்டார்கள். அதேபோன்று திருநெல்வேலியில் இருந்து திரும்பிய பிறகு எப்பொழுது வந்தாய் என்று கூட கேட்க மாட்டார்கள் அல்வா எங்கே என்றுதான் கேட்பார்கள் அந்த அளவிற்கு திருநெல்வேலி அல்வா தமிழக மக்களின் நாவை அடிமையாக்கி உள்ளது. அப்படிப்பட்ட இந்த அல்வாவை 1940களில் ராஜஸ்தானில் இருந்து தொழில் செய்ய பிஜிலி சிங் என்பவர் தமிழகத்தின் திருநெல்வேலியில் செய்ய தொடங்கினார்.
தற்போது இந்த கடையை இவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகள் நடத்துகின்றனர். அதோடு எதற்காக இந்த கடைக்கு இருட்டுக்கடை என்ற பெயர் வந்தது என விசாரிக்கும் பொழுது இந்த கடை ஆரம்பிக்கப்பட்ட நாளில் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே இருந்ததாகவும் மாலை நேரத்தில் திறக்கப்படும் இந்த கடை இருட்டாய் இருப்பதாலும் காலப்போக்கில் இந்த கடையை இருட்டுக்கடை என்று கூற ஆரம்பித்தது விட்டனர். ஆனால் இதுவே தற்பொழுது சிறந்த பெயராக அமைந்துள்ளது. மேலும் இந்த இருட்டுக்கடை அல்வாவிற்கு என்று தனிச்சுவை வருவதற்கு காரணமாக இவர்கள் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கையால் அரைத்து அதில் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரையும் சேர்ப்பதால் இந்த அல்வாவிற்கு தனிச்சுவை தருவதாகவும் கூறுகின்றனர். மேலும் இயந்திரம் பயன்படுத்தப்படாமல் கைகளால் தான் அல்வாவை கிண்டுகிறார்கள் என்பதால் ஒரு நாளிற்கு குறிப்பிட்ட அளவு அல்வாவை மட்டுமே இவர்கள் தயார் செய்வதாக கூறப்படுகிறது. தற்போது இவர்கள் இந்த வியாபாரத்தை ஆன்லைன் முறையிலும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனால் இருட்டுக்கடை அல்வா என்ற பெயரை பயன்படுத்தி பல போலிகள் இணையதளத்தில் விற்கப்படுவதாகவும் அதனால் அதை யாரும் நம்ப வேண்டாம் மக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக தனது சமூக வலைதள பக்கத்தில் போலியாக இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட அல்வா பாக்கெட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டு உண்மையாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா எங்கு விற்கப்படுகிறது என்பதை குறித்தும் அதற்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மற்றும் இணையதளத்தையும், பிராண்ட் மற்றும் பேக்கிங் கவரையும் சேர்த்து தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். முன்னதாக சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்து இருந்த பொழுதும் திருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா நிறுவனம் தாங்களாக முன்வந்து மக்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே சமைத்து கொடுத்து வந்தனர். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது இந்த நிலையில் போலியாக இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் அல்வாக்கள் விற்கப்படுவதை குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்த அதிகாரப்பூர்வமான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா நிறுவனத்திற்கு மக்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.