குருபூஜைகளுக்கு செல்வது வார் ஜோனுக்குள் செல்வது போல, இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வது போல் உள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு ஆளுநரை ஏக வசனத்தில் ஒருமையில் திட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியமான தலைவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட்டனர்.
30ம் தேதி தென் தமிழகத்தில் குருபூஜைகளுக்கு செல்வது வார் ஜோனுக்குள் செல்வது, இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வது போல உள்ளது. ஆளுநரின் கருத்து எந்த வகையிலும் தவறு கிடையாது. திமுக சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேரின் பெயர்களை பாடப்புத்தகங்களில் சேர்த்தது என வெள்ளை அறிக்கை தர வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு, திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கின்றனர். எந்த ஊரில் பேருந்து நிலையம் திறந்தாலும், கலைஞரின் பெயரை வைக்கின்றனர் என விமரித்தார்.
அவர்கள் சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் பெயர்களை வைக்க மாட்டார்கள் என்று திமுக அரசை விமர்சித்தார்.கவிஞர் பாரதியார் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை. பாரதியாரை திமுகவினர் பலகாலம் ஏற்று கொள்ளவில்லை. பாரதியாரை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்தனர். பாரதியாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை என அவரது வீட்டை அரசுடமை ஆக்கினார்கள்.பாரதியாரை பற்றி டிராமா போடுவதை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும்.
நீட் தேர்வுக்கு சுப்ரீம் கோர்ட் போகாமல் கையெழுத்து இயக்கம் என்று நாடகமாடி வருகின்றனர். ஒன்றரை கோடி தொண்டர்கள் வைத்துள்ள திமுக 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை திமுக கட்சியை இழுத்து மூடி விடலாம். நீட் தேர்வை அனைவரும் ஏற்று கொண்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்தார்.
எனக்கு சிரிப்பு தான் வருது என்று சிரித்தபடியே பதிலளித்தார். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது.மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம். தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும். பாஜகவில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார்.
நீட் தற்கொலைக்கு முதல் குற்றவாளி ஸ்டாலின், இரண்டாவது குற்றவாளி உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் தான் ஜீரோ என காட்டுவதற்காக தான் முட்டையை கையில் எடுத்துள்ளார். அவர் சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்கிறார். ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆர் எஸ் எஸ்., இல் சேர்ந்தவர்களுடைய எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஆர் எஸ் எஸ் வளர்ச்சி கண்டு திமுக அரசு பயந்துள்ளது. என்று தெரிவித்தார்.