24 special

பேசுறது எல்லாம் பொய்யா; அடபோங்க உதயா? - கழக உடன்பிறப்புகளை கலங்க வைத்த வீடியோ!

Udhayanidhi stalin
Udhayanidhi stalin

திராவிட கழகத்தில் இருந்து உதயமான திராவிட முன்னேற்ற கழகத்தில் பெரியார் வெறுத்த மூட நம்பிக்கைகள் தலைமையின் வீட்டிலேயே மலிந்து வருவது உ.பி.க்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 


2018ல் கட்சியில் களமிறங்கி 2019ல் இளைஞரணி செயலாளர், 2021-யில் சட்டமன்ற உறுப்பினர், 2022-ல் அமைச்சர் என உதயநிதி ஸ்டாலின் அசுர வளர்ச்சி அடைந்து வருவதை மக்கள் ஜீரணித்துக்கொள்ள முயற்சித்தாலும், மூடநம்பிக்கை, கடவுள் மறுப்பு, சனாதனம் என்றெல்லாம் பேசும் திமுக வீட்டிற்கு உள்ளே அதே கொள்கைகளை பின்பற்றி வருவது தான் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. 

ஊருக்கே திராவிடம், கடவுள் மறுப்பு, சுயமரியாதை என வகுப்பெடுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தனது மகனுடைய பதவியேற்பு விழாவை மட்டும் நல்ல நேரம், சுபமுகூர்த்த நாளில் நடத்தியுள்ளது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. 

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லப்படும் நிலையில், மேல்நோக்கு நாள் மற்றும் சுபமுகூர்ந்த நாளில் பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி உதயநிதி பதவியேற்க உள்ள நேரம் நல்ல நேரம் என்றும், அமிர்த யோகம், சஷ்டி திதியில் பதவியேற்க உள்ளார். கார்த்திகை மாதத்தில் மகன் பதவியேற்றால் டாப்பாக வருவார் என ஆருடம் சொல்லப்பட்டதால் துர்கா ஸ்டாலின் இந்த ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி பதவியேற்பு விழாவை முன்னிட்டு, தஞ்சையிலிருந்து சிறப்பு கும்பம், ஐயர்கள் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை பதவியேற்புக்கு வருகை,  நேற்று முழுக்க சிறப்பு பூஜைகள் என பெரியாரிய கொள்கைகளை கோபாலபுரம் இல்லத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லமே பக்தி பரவசத்துடன் தயாரானதாக கூறப்படுகிறது. 

இதுசம்பந்தமான செய்திகள் நேற்று முதலே இணையத்தில் உலா வந்து கொண்டிருந்த நிலையில், இன்று அமைச்சரான பிறகு கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு வயதான சுமங்கலி பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்கும் வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 

இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறைக்குச் சென்று முதல் கையெழுத்திட்டார். அதன் பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்தும், தேங்காய் சுற்றியும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருவதை அடுத்து திமுக உடன்பிறப்புகள் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். 

இதோ அந்த வீடியோ.... 

https://twitter.com/IndiraniSudala1/status/1602943268719046656