பதிவு - PRAKASH P
தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதா ?1980 களில் பாஜக எனும் கட்சி இருக்கிறது என்று கூட பலருக்கு தெரியாது. பொதுவாக பலரும் அதை ராமர் கட்சி என்றே அழைப்பது வழக்கம். சென்னையில் எல்லாம் தேசிய தலைவர்கள் வந்து பாஜக பொதுக்கூட்டம் நடத்தினால் கூட கூட்டம் திரள்வதே பெரிய விஷயம். அதனால்தான் காவிப்படை அதிகம் இருக்கும், குமரியில் கோவையில்தான் பொதுக் கூட்டம் நடத்துவார்கள்.
90 களில் அயோத்தி கரசேவை தொடங்கிய பின் விழிப்புணர்வு அதிகமாகியது. பல பலிதானிகளின் தியாகத்தாலும், இந்து உணர்வாளர்களின் அபரிதமான உழைப்பாலும் ஒரு அஸ்திவாரம் ஏற்பட்டது. 98-ல் பாஜக ஆளுங்கட்சியாக உருவெடுக்க வெளிவட்டங்களில் இருந்து பாஜகவிற்குள் பலரும் வரத் தொடங்கினர். இப்படி இணைந்தவர்களை 98+ க்ரூப் என்று அழைக்கலாம்.
2004 பாஜகவின் தோல்வி, 2014 வரை காங்கிரஸ் ஆட்சி. அதிலும் 2006-11 வரையான தி.மு.க.வின் 2ஜி ஆட்சி அவர்களுக்கு மிகப்பெரும் ஆளுமையை கொடுக்க, அந்த ஆளுமையில் சிக்கி சில உணர்வுமிக்க தமிழக பாஜக தலைவர்களை கூட அது சீரழித்தது. திமுகவோடும், அதன் பின் 2011-ல் அதிமுகவோடும் அட்ஜெஸ்ட்மெண்ட் அரசியல் செய்யாமல், அரசியலில் இருக்கவே இயலாது எனும் வகையில் பல பாஜக தலைவர்கள் நடந்துக் கொண்டார்.
2013-ல் சங்- பரிவார் அமைப்புகள் மோடி தலைமையில் பாஜகவை வளர்ப்பதற்கு மிகப்பெரும் வகையில் களமிறங்க, மிகப்பெரும் மாற்றம் ஏற்பட தொடங்கியது. 2014-ல் பாஜக ஆட்சியை பிடித்ததும் தமிழகத்தில் பலர் பாஜகவில் இணைய தொடங்கினர். இவர்களை 2014+ க்ரூப் என்பேன். 2014க்கு பிறகும் சரியான ஆளுமை இல்லாத தலைவர்கள் வசம் பாஜக சிக்கி சின்னாபின்னமாகி வந்ததே கள யதார்த்தம்.
மோடிப் போன்ற ஒரு சரித்திர தலைவனின் செயலாக்கம் தமிழகத்தில் எதிரொலிக்கவில்லை. உணர்வாளர்கள் மிகப்பலர் உருவாகி விட்ட நிலையில் அவர்களை முனைப்புடன் யுக்தி ரீதியாக கொண்டு செல்ல ஆள் இல்லை.2019 களில் எல் முருகன் வந்த பிறகு ஒரு 'மாஸ்' ஏற்படுத்தினார். குறிப்பாக பட்டியல் இன மக்கள் பாஜகவை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
வேல் யாத்திரை மிகபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் அதை அடுத்த கட்டத்திற்கு ஒரு quantum jump என்பார்களே, அப்படி எடுத்து சென்றுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. சமீபத்திய உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று மிக சிறப்பாக பாஜக செயல்பட்டது ஒரு மைல்கல். அவரின் அசாத்திய ஆளுமை, திட்டமிடல், அபரிதமான பேச்சுத் திறன், பன்மொழி புலமை, குறிப்பாக எந்த 'வீக்னெஸ்' உம் இல்லாமல் இதுவரை இருந்து வருவது மிகப்பெரும் பலம்.
இன்று பாஜகவின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. பார்க்கும் இடமெல்லாம் திராவிட கட்சிக்கு இணையாக பாஜகவின் கொடிகள். பல கார்களில் பாஜகவின் கொடி. பாஜக பொதுக்கூட்டங்களில் திமுகவை அலற வைக்கும் அளவிற்கு கூடும் கூட்டம் என கட்சியின் எழுச்சி கண்கூடாக தெரிகிறது.
அண்ணாமலை அவர்களை பொறுத்தவரை அவரின் மீது பலரும் சுட்டிக் காட்டும் குறைகள். ஒரு குறிப்பட்ட வட்டத்தில் அவர் இருப்பது. Accessibility இல்லாமை. குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே அவரை அணுக முடியும் என்பது. கேபினுக்குள் சீனியர்களை வெச்சு செய்வது. தன்னிலை உயர்த்தலில் அதிகம் ஈடுபடுவது ஆகியவையே.
ஆனால் மேலே குறிப்பிட்ட இந்த குறைகளை மறுபக்கத்தில் பார்த்தால், அதன் சில நியாயங்களும் புலப்படலாம். எப்படி இருந்தாலும் நாளை முதல்வராய் வரப்போகிறவர் எனும் வகையில் அவர் இந்த குறைகளை சரி செய்துக் கொள்வது மிக மிக முக்கியம். மேலும் தமிழகம் போன்ற ஹீரோ வர்ஷிப் அதிகம் இருக்கும் ஒரு மாநிலத்தில் தனி ஒருவரை உயர்த்துவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
மேலும் அண்ணாமலை தனியா செயல்பட்டா என்ன பிரயோஜனம், அவரை சுத்தி இருக்கற பல கருப்பு ஆடுகளை மாற்றாமல் எதுவும் மாறாது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ, காவி எழுச்சியும், தாமரையின் வளர்ச்சியும் தமிழகத்தில் எந்த சக்தியாலும் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.