24 special

சும்மாவே ஆடும் இதுல இது வேறயா? அதிரடி காட்டப்போகும் அமலாக்கத்துறை...!

Enforcement,
Enforcement,

1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமலாக்கத்துறை பிரிவு அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் 1999, பண மோசடி தடுப்பு சட்டம் 2002 ஆக இந்த இரண்டு நிதி சட்டங்களின் விதிகளை செயல்படுத்துவதே அமலாக்க துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரமாகும். மேலும் அமலாக்க துறையின் முக்கிய பணியாக இந்திய அரசு வகுத்துள்ள பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்துவது உள்ளது. சிறிது காலத்திற்குப் பிறகு அமலாக்கத்துறை பிரிவு என்பது அமலாக்க இயக்குனரகம் என்று மாற்றப்பட்டது இதன் தலைமையகம் டெல்லியிலும் பிராந்திய அலுவலகங்கள் மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற ஐந்து முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது. இந்த பிராந்திய அலுவலகங்கள் அமலாக்க துறையின் சிறப்பு இயக்குனர்களால் வழிநடத்தப்படுகிறது. 1960 வரை இதன் நிர்வாக அதிகாரங்கள் பொருளாதார விவாகர துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது அதற்குப் பிறகு அமலாக்க இயக்குனரகம் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. 


அதோடு பணப்பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை சட்டங்களில் சந்தேகத்திற்குரிய விதிமீறல்கள் ஏதேனும் தென்பட்டால் அதை பற்றி விசாரிக்கவும் குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளவும் தேவைப்பட்டால் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தற்காலிகமாக பறிமுதல் செய்யவும், மேலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கவும் அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது. நிதி குற்றங்கள் மட்டுமல்லாது குற்றவியல் சட்டமான பண மோசடி செய்பவர்கள் மீதும் வழக்கும் தொடரப்பட்டு திட்டமிட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிற நபர்களை விசாரிக்கவும் அமலாக துறைக்கு முழு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனுடன் பண மோசடி வழக்கில் சிக்கி இந்தியாவிலிருந்து தப்பி ஓடியவர்கள் மீதும் தொடுக்கப்படும் வழக்குகளை அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு அதிகாரங்களை ஒருமித்து வைத்துள்ள அமலாக்க துறையின் நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ளதையும் நாம் செய்திகளில் கண்டு வருகிறோம். குறிப்பாக அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தமிழக அரசியலில் மட்டுமல்லாது பிற மாநில அரசியல்களிலும் எதிரொலித்தது. 

தற்போதும் செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளில் அதிக ஆர்வம் காட்டி அவர் பொதுமக்களை மோசடி செய்ததை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் அமலாக்கத்துறை உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அமலாக்க துறைக்கு தற்போது கூடுதல் அதிகாரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஜிஎஸ்டி அமைப்பை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றிற்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் தகவல்களை பகிரும் நிறுவனங்களின் பட்டியலில் தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்க்கையும் மத்திய அரசு சேர்த்துள்ளது. 

இதன் மூலம் ஜிஎஸ்டி தாக்கல் செய்பவர்களில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய பண மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்தால் அதனை பற்றி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும் என்றும் ஜிஎஸ்டியில் ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அதைப் பற்றி விசாரித்து வழக்கு பதியவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கூடுகிறது என்று கூறப்படுகிறது. அமலாக்கத்துறைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த கூடுதல் அதிகாரம் சிலரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது குறிப்பாக தமிழகத்தில், அமலாக்கத்துறை இத்தனை பவர்களுடன் இறங்குவது தங்களுக்கு ஆபத்து என சில அரசியல் புள்ளிகள் நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.