உச்ச நீதிமன்றத்தில் கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கின் விசாரணையின் போது தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லை என தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான வில்சனுக்கு உச்ச நீதிமன்றம் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகளை வழங்குதல், பணம் வழங்குதல் உள்ளிட்டவற்றின் மூலமாக நாட்டில் கட்டாய மதமாற்றங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டிய வழக்கறிஞர் அஸ்வினி குமாா் உபாத்யாய, அதைத் தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.
கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான அறிக்கையைத் தயாரிக்குமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளிடம் கருத்துகளைப் பெற்று பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிடுகையில், ‘‘இந்தப் பொதுநல மனு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற மதமாற்றங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவதில்லை’’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘தமிழ்நாடு வழக்குரைஞா் இவ்வாறு பேசுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். அக்காரணங்களுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றங்கள் நடைபெறவில்லை எனில் அதை நீதிமன்றம் வரவேற்கிறது.
அதே வேளையில், அனைத்து மாநிலங்களின் நலன் குறித்தும் நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட மாநிலம் மட்டும் குறிவைக்கப்படுவதாகக் கருத வேண்டாம். இந்த விவகாரத்துக்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.
கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் உதவியும் தேவைப்படுகிறது. கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்துக்கு அவா் உதவ வேண்டும்’’ என்றனா்.
அதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா் வழக்கு மீதான முந்தைய விசாரணைகளின்போது, கட்டாய மதமாற்ற நடவடிக்கைகள் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடில் நாட்டில் அது கடினமான சூழலை ஏற்படுத்திவிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டாய மதமாற்றம் குறித்த வழக்கில் தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லை என கூறி நீதிமன்றத்திடம் வாங்கி கட்டி இருக்கிறார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.