கர்நாடகா : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவில் அமைந்துள்ள கார்வார் கடற்படை தளத்திற்கு சென்றபோது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கல்வாரி மரபுசார் நீர்மூழ்கிக்கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார். அப்போது செய்தியாளர்களிடம் தனது பயணம் குறித்து விவரித்தார்.
கார்வார் கடற்படைத்தளத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் INS கந்தேரியில் கடற்பயணம் மேற்கொண்டார். மேலும் செய்தியாளர்களிடம் " கடற்படை போர்ப்பயிற்சி என்பது உலகின் மற்றநாடுகளையோ அல்லது அண்டைநாடுகளையோ கோபமூட்ட அல்ல. இது ஒரு பாதுகாப்பு பயிற்சி மட்டுமே. நமது வலிமையை உலகிற்கு தொடர்ந்து தெரியப்படுத்தி வருகிறோம்" என அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
அமைச்சரின் பயணத்தை பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் " போர்வீரர்களை போல இந்திய கடற்படை ஒரு நவீனத்துவம் வாய்ந்த மற்றும் நம்பகத்தனமான படை. எந்தவித சூழ்நிலைகளிலும் விழிப்புணர்வுடனும் வீரத்துடனும் வெற்றிநடை போடக்கூடியது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்று இந்திய கடற்படை உலகின் முன்னணி கடற்படைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய கடற்படைகள் நமது நாட்டுடன் இணைந்து பணியாற்றவும் தங்களது ஒத்துழைப்பை தரவும் தயாராக உள்ளன. நமது நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் என பெயர்வாங்கிய INS விக்ராந்த் ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய கடற்படைத்தளத்தில் ஒன்றான கார்வாரில் பணியை தொடங்க உள்ளது. இந்த INS விக்ராந்த் இந்திய பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
அமைச்சர் ஸ்டெல்த் நீர்மூழ்கி கப்பலில் நான்குமணிநேர பயணத்தை மேற்கொண்டார். மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை அவர் ஆய்வுசெய்தார். கடலுக்கடியில் ஆயுதத்திறன் செயல்பாடு மற்றும் போர் வியூகம் போன்ற விஷயங்களை அவர் நேரில் கண்டார். நிலத்தடியில் தனித்துவம் பெற்ற சாதனமாக இது இருக்கும் என கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் கடற்படைத்தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் மற்றும் மூத்த கடற்படை அதிகாரிகள் அமைச்சக அதிகாரிகள் உடனிருந்தனர்" என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சரின் பயணத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த INS விக்ராந்த் எதிரிக்கப்பலின் நடவடிக்கைகளை துல்லியமாக கணிப்பதோடு ராடாருக்கு தெரியாமல் ஏவுகணைகளை ஏவுவதில் வல்லமை பெற்றது என்பது பெருமைக்குரிய ஒன்று.