தமிழ் நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. காவிரியில் அக்டோபர் 15ஆம் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், உத்தரவை மதிக்காத கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாததோடு, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கர்நாடகாவில் செப்டம்பர் மாதம் முழு போராட்டத்தை கையில் எடுத்து தமிழகத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனிடையே தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து கொண்டே செல்கிறது. சேலம் மேட்டுர் அணையில் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சியை கண்டுள்ளது.
இதன் காரணமாக டெல்டா பகுதிகளில் விவசயிகள் சார்பாக கர்நாடக அரசை கண்டித்தும். கர்நாடக அமைப்பினருக்கும், கர்நாடக காங்கிரசுக்கும் எதிராக தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 8 டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக இன்று காலை முதல் தஞ்சை பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 10,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 30000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன டெல்டா பகுதிகளில் நடைபெறும் முழு அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் காவிரி போராட்டத்தை மக்கள் உணர்வுப்பூர்வமாக அணுகி வருகிறார்கள்.
முழு அடைப்பு காரணமாக சுமார் 1 லட்சத்திற்கும் மேல் கடைகள் மூடப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் கூடிய தமிழக சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கடைகள் அடைக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்கள் முடங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.